Published : 26 Feb 2025 06:18 PM
Last Updated : 26 Feb 2025 06:18 PM
கோவை: ‘தமிழகத்தில் 2026 தேர்தலில் திமுக வீழ்த்தப்பட்டு, பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்’ என்று கோவையில் நம்பிக்கை தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொகுதி மறுசீரமைப்பு முதல் நிதி பகிர்வு வரை பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேசினார்.
கோவை பீளமேடு பகுதியில் பாஜக மாநகர் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா இன்று நடந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை வகித்து கொடி ஏற்றி, பசுவுக்கு உணவளித்து, மரக்கன்றுகளை நட்டு வைத்து புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து ராமநாதபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் கட்டப்பட்ட புதிய பாஜக அலுவலகங்களை காணொலி மூலம் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசும்போது, “புதிதாக திறக்கப்பட்ட மூன்று பாஜக அலுவலகங்களும் எதிர்வரும் நாட்களில் மக்களுக்காக செயல்பட்டு, மக்கள் கூடும் இடமாக செயல்பட வேண்டும். மத்திய நிதியமைச்சர் சிறப்பான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். நடுத்தர மக்கள், விவசாயம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
2025-ம் ஆண்டு தொடக்கத்தில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பொறுப்பேற்றுள்ளார். ஒடிசாவில் பெரும்பான்மை பெற்றள்ளோம். ஆந்திராவில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம். 2025-ம் ஆண்டு டெல்லி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. 2026-ம் ஆண்டு தமிழகத்தில் திமுக அரசு வீழ்த்தப்பட்டு தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான ஆட்சி அமைவது உறுதி.
தமிழகத்தில் அதிகரித்து காணப்படும் ஊழல் ஒழிக்கப்படும். தேச விரோத சக்திகள் வேரோடு பிடிங்கி எறியப்படும். தமிழ் மொழி, மக்கள் கலாச்சாரத்தை போற்றும் பிரதமராக நரேந்திர மோடி விளங்கி கொண்டிருக்கிறார். செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவி தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இன்று தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு காணப்படுகிறது. வேங்கைவயல் சம்பவம் நடந்து 700 நாட்கள் கடந்த பின்னரும் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்கள் கொல்லப்படுகின்றனர். போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. கனிமவள கொள்ளை தொடர்கிறது. ஊழல் செய்வதில் திமுகவினர் பட்டம் பெற்றவர்களாக திகழ்கின்றனர்.
தொகுதி மறுசீரமைப்பு குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் தெளிவாக கூறியுள்ளார். விகிதாச்சார அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்றும், தென்னிந்திய மாநிலங்கள் உள்ளிட்ட நாட்டில் எந்த மாநிலத்துக்கும் பாதிப்பு ஏற்படாது என உறுதியளித்துள்ளார். திமுக முதல்வர் ஸ்டாலின் தவறான தகவல்களை தெரிவித்து மக்களுக்கு துரோகம் செய்து வருகிறார்.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு 10 ஆண்டுகளில் 1,52,901 கோடி ரூபாய் தமிழகத்துக்கு வழங்கியது. பாஜக தலைமையிலான மத்திய அரசு 2014 முதல் 2024 வரை தமிழகத்துக்கு 5,01,337 கோடி வழங்கியுள்ளது.
அனைவரும் உற்சாகத்துடன் செயல்படுங்கள். தமிழகத்தில் அமைய உள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி புதிய யுகத்தை உருவாக்கும் ஆட்சியாக இருக்கும். வகுப்புவாதம், பிரிவினைவாதம் என்ற சிந்தனைகள் முடிவுக்கு கொண்டுவரப்படும். ஊழல் முற்றிலும் ஒழிக்கப்படும்” என்று அவர் பேசினார்.
இந்த நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், கோவை மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமித் ஷா உருவம் பொறித்த நினைவு பரிசு வழங்கினார். அமித் ஷாவுக்கு அணிவிக்கப்பட்ட அங்கவஸ்திரத்தில் ‘தமிழ் அன்னை வாழ்க’ என இருபுறங்களிலும் வாசகம் கொண்டிருந்தது. 133 திருக்குறள் அதிகாரங்கள், இரண்டு முனைகளிலும் திருவள்ளுவர் படம் இடம்பெற்றிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT