Published : 26 Feb 2025 04:56 PM
Last Updated : 26 Feb 2025 04:56 PM
சென்னை: அரசு உதவி மருத்துவர் பணி நியமனத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் 400 பேரை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 2,642 அரசு உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு மருத்துவ தேர்வு வாரியம் கடந்த ஜன.5 அன்று தேர்வு நடத்தி இறுதி தகுதிப் பட்டியலை வெளியிட்டது. இதில் தேர்ச்சி பெற்ற 400 பேர் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் 2024 ஜூலை 15-ம் தேதிக்கு முன்பாக நிரந்தரமாக பதிவு செய்யவில்லை எனக் கூறி அவர்களை தகுதிப் பட்டியலில் இருந்து மருத்துவ தேர்வு வாரியம் நீக்கியது.
இதை எதிர்த்து மருத்துவர்கள் பிரியதர்ஷினி, சாய் கணேஷ் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில், 'மருத்துவப் பல்கலைக்கழகம் தங்களுக்கு சான்றிதழ் வழங்க காலதாமதம் செய்ததால் மருத்துவ கவுன்சிலில் ஜூலை 15-க்கு முன்பாக நிரந்தரமாக பதிவு செய்ய முடியவில்லை. இதனால் தற்காலிக பதிவுச் சான்றிதழை வைத்து உதவி அரசு மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பித்து, அதில் தேர்ச்சியும் பெற்றுள்ளோம். எனவே, எங்களுக்கும் பணி நியமனம் வழங்க உத்தரவிட வேண்டும். எங்களை நீக்கி மருத்துவ தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள இறுதி தகுதிப் பட்டியலுக்கு தடை விதிக்க வேண்டும்' எனக் கோரியிருந்தனர்.
இந்த வழக்குகள் கடந்த பிப்.24 அன்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, அரசு உதவி மருத்துவர்களுக்கான பணி நியமன உத்தரவுகளை தமிழக அரசு பிப்.26 அன்று வழங்கவுள்ளது என மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.வேல்முருகன் தெரிவித்தார். அதையடுத்து நீதிபதி, அந்த பணி நியமனங்கள், இந்த வழக்கின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது எனக் கூறி விசாரணையை பிப்.26-க்கு தள்ளி வைத்திருந்தார்.
அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ‘‘கட்-ஆப் தேதியான 2024 ஜூலை 15-ம் தேதிக்கு முன்பாக மருத்துவ கவுன்சிலில் நிரந்தரமாக பதிவு செய்துள்ளவர்கள் மட்டுமே பணி நியமனம் பெற தகுதியானவர்கள் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிய விதிகளுக்கு உட்பட்டே 400 பேர் தகுதிப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்,'' என வாதிட்டார். அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT