Published : 26 Feb 2025 03:09 PM
Last Updated : 26 Feb 2025 03:09 PM
பரந்தூரில் அமையவிருக்கும் விமான நிலையத்தை இணைக்கும் மெட்ரோ ரயில் திட்டத்தை காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை வரை நீட்டிக்க வேண்டும் என்றும், செவிலிமேடு பகுதியில் இருந்து வாலாஜாபாத் அருகே உள்ள வெண்குடி வரை பாலாற்றை ஒட்டி புதிய சாலை அமைக்க வேண்டும் என்றும் காவல் துறை சார்பில் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஏற்கெனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த மாநகரமாக உள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பட்டுச் சேலைகள் வாங்க வருபவர்கள், சுற்றியுள்ள தொழிற் சாலைகளில் பணிக்குச் செல்பவர்கள் ஆகியோரால் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு சாலைகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு வருகின்றன. போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
பரந்தூர் விமான நிலைய திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக உள்ளன. இந்த விமான நிலைய திட்டம் செயல்படுத்தப்பட்டால் விமான நிலையத்துக்கு செல்பவர்கள், விமான நிலையத்தில் இருந்து வருபவர்கள் காஞ்சிபுரம் நகருக்குள் நுழைந்தால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கும் சூழல் இருக்கிறது.
இதனால், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான மாற்றுத் திட்டங்களை காவல்துறை பரிந்துரை செய்துள்ளது. இந்த திட்டங்கள் மாவட்ட ஆட்சியர் மூலம் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தற்போது மெட்ரோ ரயில் சென்னையில் பரங்கிமலை முதல் சென்னை சென்ட்ரல் வரையிலும், விமான நிலையம்முதல் விம்கோ நகர் வரையிலும் செயல்படுகிறது. மாதவரம்-சோழிங்கநல்லூர், பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் உட்பட 3 இடங்களில் புதிய மெட்ரோ ரயில்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கு அடுத்த கட்டமாக மெட்ரோ ரயிலை பூந்தமல்லியில் இருந்து பரந்தூர் வரை நீட்டிக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த பாதை, பூந்தமல்லியில் இருந்து சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நீர்வள்ளூர் வரை வந்து அங்கிருந்து பரந்தூர் செல்கிறது. இந்த ரயில் பாதையை நீர்வள்ளூரில் இருந்து பொன்னேரிக்கரை வரை நீட்டித்து அங்கிருந்து பரந்தூர் செல்ல வேண்டும் என்று காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.
பொன்னேரிக்கரையில் பேருந்து நிலையம் வர உள்ளதாலும், காஞ்சிபுரம் ரயில் நிலையம் பொன்னேரிக்கரைக்கு அருகில் உள்ளதாலும் இந்த பரிந்துரையை காவல்துறை செய்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சென்னை செல்வதற்கும், பணிக்கு செல்வதற்கும் மெட்ரோ ரயிலை பயன்படுத்த எளிதாக இருக்கும். இதற்காக 8 கி.மீ தூரம் மட்டுமே கூடுதலாக ரயில் பாதை அமைக்க வேண்டி இருக்கும்.
ஆற்றையொட்டி புதிய சாலை: இதேபோல் செவிலிமேடு பகுதியில் இருந்து வாலாஜாபாத் அருகே உள்ள வெண்குடிவரை காஞ்சிபுரம் நகருக்குள் நுழையாமல் பாலாற்றையொட்டி ஒரு சாலை அமைக்கவும் காவல்துறையினர் பரிந்துரை செய்துள்ளனர். இந்த சாலை அமைத்து முடிக்கப்பட்டால் காஞ்சிபுரம் நகருக்குள் நுழையாமல் வெண்குடி சென்று அங்குள்ள புறவழிச் சாலை மூலம் தாம்பரம் செல்ல முடியும். செங்கல்பட்டு, பரந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் செல்ல சாலை வசதி உள்ளது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.சண்முகம் கூறும்போது, ‘நீர்வள்ளூர் வரை வரும் மெட்ரோ ரயிலை பொன்னேரிக்கரை வரை நீட்டிப்பதற்கு பெரிய அளவில் செலவு ஏதும் ஆகாது. பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவதன் மூலம் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகன நெரிசலை குறைக்க முடியும். காஞ்சிபுரத்தில் இருந்து தொழில் நிறுவனங்களுக்கு பணிக்கு செல்பவர்களுக்கும் இந்த மெட்ரோ ரயில் திட்டம் வசதியாக இருக்கும்.
இதேபோல் செவிலிமேட்டில் இருந்து வெண்குடிவரை பாலாற்றையொட்டி சாலை அமைத்தால் காஞ்சிபுரம் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும். அந்த சாலை வழியாக தாம்பரம், செங்கல்பட்டு செல்பவதற்கும், பரந்தூர் செல்வதற்கும் எளிது. இந்த சாலையை அமைக்கவும் பரிந்துரை வழங்கியுள்ளோம்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT