“திமுக காண்பது பகல் கனவு; 2026-ல் அதிமுக ஒன்றிணைந்து வெல்லும்!” - ஜெ. பிறந்த நாள் நிகழ்வில் சசிகலா பேச்சு

உசிலம்பட்டியில் நடந்த கூட்டத்தில் சசிகலா உரை.
உசிலம்பட்டியில் நடந்த கூட்டத்தில் சசிகலா உரை.
Updated on
2 min read

மதுரை: “தமிழகத்தில் 2026-ல் ஆட்சிக்கு வருவதற்கு, திமுக பகல் கனவு காண்கிறது. ஜெயலலிதா மீது அன்பு வைத்த மக்கள் அனைவரும் தற்போதும் அவரை அம்மா என்று அழைக்கின்றனர். ஆனால், திமுகவினர் ‘அப்பா’ வேஷம் போடத் தொடங்கியுள்ளனர்” என்று உசிலம்பட்டியில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் சசிகலா பேசினார். மேலும், “தமிழகத்தில் 2026-தேர்தலில் மகத்தான வெற்றியை நாம் பெறுவோம். இதற்கு அதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும். வென்று காட்டுவோம்” என்றார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் தேவர் கல்லூரி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் கலந்துகொள்வதற்காக சசிகலா நேற்று சென்னையில் இருந்து மதுரை வந்தார். மதுரை- அழகர் கோயில் ரோட்டிலுள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த அவர், இன்று மாலை உசிலம்பட்டிக்கு சென்றார். வழியில் சொக்கானூரணி, கருமாத்தூர் உள்ளிட்ட இடங்களில் அவருக்கு ஆதரவாளர்கள் வரவேற்பு கொடுத்தனர். விழாவில் பங்கேற்ற அவர், மேடையில் வைத்திருந்த ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த விழாவில் சசிகலா பேசியது: “தமிழகத்தில் 2026-ல் ஆட்சிக்கு வருவதற்கு, திமுக பகல் கனவு காண்கிறது. ஜெயலிதா மீது அன்பு வைத்த மக்கள் அனைவரும் தற்போதும் அவரை அம்மா என்று அழைக்கின்றனர். ஆனால் திமுகவினர் ‘அப்பா’ வேஷம் போடத் தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. பெண்கள் வாழவே தகுதியற்ற மாநிலமாக மாறிபோனது. சென்னை தண்டையார் பேட்டையில் வடக்கு மண்டல காவல் ஆணையர் அலுவலகத்தில் ரவுடிகள் அட்டகாசம் செய்துள்ளனர். துணை ஆணையர் அலுவலகத்திலேயே இப்படி நடக்கிறது என்றால் வெளியில் மக்களுக்கு என்ன நடக்கும் என்பதை, சிந்திக்கவேண்டும்.

திமுகவினரின் வேஷம் கலையும் நேரம் வந்துவிட்டது.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பல நெருக்கடிகளை அதிமுக சந்திந்தாலும், இன்னும் 100 ஆண்டு அதிமுக தொடர தொண்டர்கள் விரும்புகின்றனர். தன்னலம் பார்க்காமல் நாம் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும். ஒற்றுமையாக செயல்பட்டால் வெற்றி பெறலாம். இதுவே தமிழக மக்களுக்கு நாம் செய்யும் நன்மை.

தீயசக்தியை அகற்ற அதிமுக ஒன்றிணையவேண்டும் என தொண்டர்கள் உணர்ந்துள்ளனர். அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளேன். எனது முயற்சி வெற்றி பெறும். அதிமுகவும் ஒன்றுபடும். அதிமுக ஆட்சி அமையும் என ஜெயலலிதா பிறந்தநாளில் தொண்டர்களுக்கு தெரிவிக்கிறேன்.

தாய், தோழி, உடன்பிறவா சகோதரியாக 34 ஆண்டு அவருடன் பயணித்த காலம் புனிதமானது. இதில் எத்தனையோ சோதனை, மகிழ்ச்சிகளை நாங்கள் சந்திந்துள்ளோம். ஒருநாளும் எங்களது துன்பங்களை யாரிடமும் சொன்னது இல்லை. இருவருமே சமாளித்து அதிலிருந்து மீண்டு வெற்றி பெற்றுளோம். ஜெ.ஜெயலலிதா எனும் நான் என அவர் உச்சரித்த போதெல்லாம் மக்கள் மகிழ்ச்சியோடு வாழ முடிந்தது. ஜெயலலிதா எண்ணங்கள் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது.

தமிழகத்தில் 2026-தேர்தலில் மகத்தான வெற்றியை நாம் பெறுவோம். இதற்கு அதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும். வென்று காட்டுவோம். வரும் காலம் நமக்கு பொற்காலமாக அமையும். எம்ஜிஆரால் உருவாக்கிய அதிமுகவை ஜெயலலிதா வளர்த்தார். அதிமுகவே எனது உயிர் மூச்சு. மீண்டும் வெற்றி பெற்று செருக்கோடு இருக்க செய்வதே என்னுடைய வாழ்நாள் லட்சியம். இந்த மண்ணின் மகளாக ஒச்சாண்டம்மன் கோயில் சாட்சியாக சொல்கிறேன். எனக்கென்று யாருமில்லை. தமிழக மக்களின் உரிமைக்கு எனது குரல் எப்போதும் ஒலிக்கும். உண்மை என்றும் தோற்காது. நம்பியுடன் இருங்குங்கள் வெற்றி நிச்சயம்” என்று அவர் பேசினார்.

இதைத் தொடர்ந்து மாணவிகளுக்கு கணினி, சைக்கிள் மற்றும் ஏராளமான மகளிர் மற்றும் சுய உதவி குழுவினருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை சசிகலா வழங்கினார். விழாவில் அவரது ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in