''தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது'': அமைச்சர் ஐ.பெரியசாமி

அமைச்சர் ஐ.பெரியசாமி  | கோப்புப் படம்
அமைச்சர் ஐ.பெரியசாமி | கோப்புப் படம்
Updated on
2 min read

திண்டுக்கல்: தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் குறைகளை கண்டறிவதிலும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதிலும் தமிழக அரசு முனைப்புடன் செயல்படுவதால், தேசிய அளவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட குற்றச்சாட்டிற்கு பதில் அளித்து, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மத்திய அரசின் அறிவிக்கையின்படி தமிழ்நாடு அரசு ஒரு தற்சார்பற்ற சமூக தணிக்கை சங்கத்தினை தோற்றுவித்து 2012-13 ஆம் ஆண்டு முதல் சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

சமூக தணிக்கையினை முறையாக நடத்துவதிலும், குறைகளை கண்டறிவதிலும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதிலும் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுவதால், தேசிய அளவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது. சமூக தணிக்கை ஆரம்பிக்கப்பட்ட 2012-13ம் ஆண்டு முதல் 2023-24 ஆம் ஆண்டு வரை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளில் சமூக தணிக்கை அறிக்கைகளின் படி மொத்தம் ரூ.291.46 கோடி நிதி இழப்பீடு எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் மாவட்ட அளவில் இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டும், ஏற்புடைய பத்திகள் கண்டறியப்பட்டும், மாவட்ட ஆட்சித்தலைவர்களால் உயர்மட்டக்குழுவில் வசூல் செய்யப்பட வேண்டிய தொகை ரூ.105.35 கோடி என முடிவு செய்யப்பட்டது. பின்னர் அரசின் தீவிர முயற்சியின் மூலம் இதில் ரூ.98.26 கோடி தொகை வசூல் செய்யப்பட்டு அதாவது 93 சதவீதம் அரசின் தலைப்பில் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

2024-25ஆம் ஆண்டிலும், சமூக தணிக்கை நடைபெற்று, 79,122 குறை பத்திகள் என இதுவரை அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இதில் 30,198 பத்திகள் நிதி இழப்பீடு பத்திகள் எனவும், அதற்கான தொகை ரூ.14.07 கோடி எனவும், மீதமுள்ள 48,924 பத்திகள் நிதி இழப்பீடு இல்லாத சாதாரண பத்திகள் எனவும் அறிக்கை பெறப்பட்டது.

இப்பத்திகள் ஆட்சித்தலைவர்களால் ஆய்வுசெய்யப்பட்டு, உயர்மட்டக்குழுவில் 6,437 பத்திகள் மற்றும் ரூ.2.04 மாவட்ட கோடி நிதி இழப்பீடு என முதற்கட்டமாக முடிவு செய்யப்பட்டது. மேலும் இதில் வசூல் செய்யப்பட வேண்டிய பத்திகளாக 6,215 பத்திகளும் நிதி இழப்பீடு தொகையாக இதுவரை ரூ.1.94 கோடி என இறுதி செய்யப்பட்டுள்ளது. மீதத் தொகை குறித்து உயர்மட்டக்குழுக் கூட்டம் மூலம் முடிவு செய்யப்பட சீரிய முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இது மாநில அளவில் கண்காணிக்கப்பட்டும் வருகிறது.

மேற்படி நிதி இழப்பீடு தொகை ரூ.194 கோடியில் சம்மந்தப்பட்டவர்களிடமிருந்து ரூ.193 கோடி வசூல் செய்யப்பட்டு அரசின் தலைப்பில் கட்டப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக, மேற்படி முறைகேட்டிற்கு காரணமானவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மீதமுள்ள பத்திகளின் மீதும் மாவட்ட ஆட்சித்தலைவர்களால் உயர்மட்டக்குழு கூட்டம் நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வனைத்து பணிகளும் இந்நிதியாண்டிற்குள் முடிக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in