

சென்னை: "பல கோடி ரூபாயை மத்திய அரசு நிறுத்தினாலும், திராவிட மாடல் ஆட்சியின் பணி தொடரும். இரு மொழிக் கொள்கையில் உறுதியாக இருப்போம். மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம்" என அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலினின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், 2025 பிப்ரவரி 20 ஆம் தேதி முதல், 2026 பிப்ரவரி 19 ஆம் தேதி வரையிலான 365 நாட்களும், நாள் ஒன்றுக்கு 1000 நபர்களுக்கு, காலை உணவு வழங்கும் சிறப்புமிகு "அன்னம் தரும் அமுதக்கரங்கள்" மாபெரும் திட்டத்தின் 4ஆம் நாளான இன்று துறைமுகம் கிழக்கு பகுதி, மண்டலம்-5, வார்டு-60, மண்ணடி, செம்பு தாஸ் தெரு சந்திப்பு, மூக்கர் நல்லமுத்து தெரு மற்றும் அன்னை சத்யா நகர் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பொதுமக்கள் மற்றும் சிறுவர்களுக்கு காலை உணவு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: முதல்வரின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மக்கள் முதல்வரின் மனிதநேய விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ஆண்டு முழுவதும் ஏழை எளிய பொதுமக்களுக்கு காலை உணவு தரும் "அன்னம் தரும் அமுதக்கரங்கள்" திட்டம் தொடங்கி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சென்னை கிழக்கு மாவட்டம், துறைமுகம் கிழக்கு பகுதி திமுக சார்பில் மண்ணடி மற்றும் காமராஜர் சாலையில் உள்ள அன்னை சத்யா நகரில் உள்ள ஏழை எளிய பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.
மகா சிவராத்திரிக்கு முதலில் வடிவம் கொடுத்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சி, முதலில் மயிலாப்பூரில் தொடங்கப்பட்ட மகா சிவராத்திரி படிப்படியாக தற்போது இந்தாண்டு 9 கோயில்களில் மகா சிவராத்திரி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. 2022-2023 ஆம் சட்டமன்ற அறிவிப்பின்படி 18.02.2023 அன்று மகாசிவராத்திரி திருவிழா கீழ்குறிப்பிட்டுள்ள 5 திருக்கோயில்களிலும் ஆன்மிக கலை, இசை, நடன நிகழ்ச்சிகள் மற்றும் ஆன்மிக சொற்பொழிவுகள் போன்றவை நடத்தப்பட்டு மகாசிவராத்திரி விழா மிக விமரிசையாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அந்த ஐந்து கோயில்கள், அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில், திருவண்ணாமலை மாவட்டம், அருள்மிகு பட்டீஸ்வரசுவாமி திருக்கோயில் (பேரூர், கோவை மாவட்டம்), அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் (மயிலாப்பூர், சென்னை), அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில் (தஞ்சாவூர் மாவட்டம்), அருள்மிகு நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாள் திருக்கோயில் (திருநெல்வேலி மாவட்டம்) ஆகும்.
அதேபோல 2023-2024 ஆம் ஆண்டு சட்டமன்ற அறிவிப்பின்படி மேற்குறிப்பிட்டுள்ள 5 திருக்கோயில்களுடன் கூடுதலாக 2 திருக்கோயில்களையும் சேர்த்து மகாசிவராத்திரி திருவிழா 08.03.2024 அன்று மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதாவது, அருள்மிகு ஜெம்புகேஸ்வரர் திருக்கோயில் (திருவானைக்காவல்), ஸ்ரீரங்கம் வட்டம் (திருச்சி மாவட்டம்), அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் (மதுரை மாவட்டம்) ஆகும்.
தற்போது 2024-2025 ஆம் ஆண்டு சட்டமன்ற அறிவிப்புகளின்படி ஏற்கனவே மகாசிவராத்திரி விழா கொண்டாடப்படும் 7 திருக்கோயில்களுடன் சேர்த்து நடப்பாண்டில் கூடுதலாக கீழ்குறிப்பிட்டுள்ள 2 திருக்கோயில்களில் 26.02.2025 மகாசிவராத்திரி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அது, அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில் (திருவாரூர் மாவட்டம்), அருள்மிகு வடாரண்யேஸ்வரசுவாமி திருக்கோயில், திருவாலங்காடு, திருத்தணி வட்டம் (திருவள்ளூர் மாவட்டம்) ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் மகாசிவராத்திரி விழாவினை கண்காணித்திட ஏதுவாக துறை அலுவலர்களை கொண்ட மதிப்பீட்டுக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. இக்குழுக்கள் திருக்கோயில்களில் மகாசிவராத்திரி விழாவிற்காக திருக்கோயில்களில் செய்யப்பட்டுள்ள பணிகளை ஆய்வு செய்து வழங்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் திருக்கோயில்களுக்கு பாராட்டு சான்று வழங்கப்படுகிறது.
மகா சிவராத்திரி விழாவன்று திருக்கோயில்களுக்கு வருகைபுரியும் பக்தர்களுக்கு இடைவிடாது பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பக்தர்களுக்கு தேவையான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அடிப்படைய வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் செய்து தரப்பட்டுவருகிறது. பல கோடி ரூபாயை மத்திய அரசு நிறுத்தினாலும் திராவிட மாடல் ஆட்சியின் பணி தொடரும். இரு மொழிக் கொள்கையில் உறுதியாக இருப்போம். மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.