

மதுரை: 'திசை தெரியாமல் செல்லும் அதிமுக கப்பலுக்கு தலைமை ஏற்க வாருங்கள்' என மதுரையில் சசிகலாவை ஆதரித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளையொட்டி, உசிலம்பட்டி பிஎம்டி கல்லூரி அருகே அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நாளை (பிப்., 24) மாலை நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பங்கேற்று ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். பிறகு ஏழை மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்குகிறார்.
இவ்விழாவில் பங்கேற்க அவர் விமானம் மூலம் சென்னையில் இருந்து இன்று மாலை மதுரை வந்தார். அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மதுரை - அழகர்கோயில் சாலையிலுள்ள தனியார் ஓட்டலில் தங்கி இருந்துவிட்டு, நாளை மாலையில் உசிலம்பட்டிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
சசிகலாவின் மதுரை வருகையையொட்டி பல்வேறு இடங்களில் அவரது ஆதரவாளர்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அதில், 'தலைமைக்கு தகுதியே என்றென்றும் எங்கள் அதிமுகவின் தலைவியே, திசை தெரியாமல் செல்லும் (அதிமுக) கப்பலுக்கு தலைமை ஏற்க வாருங்கள்' போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என்றும், கட்சி கொடி வண்ணத்திலும் ஒட்டி இருக்கும் இச்சுவரொட்டிகள் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.