

சென்னை: அரசின் அவலங்களில் இருந்து மக்களை திசை திருப்பவே திமுக இந்தி எதிர்ப்பை கையில் எடுத்துள்ளதாக அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் புதிய தலைமை அலுவலகம் சென்னை அடையாறு கற்பகம் கார்டன்ஸ் முதலாவது பிரதான சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதனை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். முன்னதாக கட்சி அலுவலகத்தின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்தில் அவர் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். அதையடுத்து பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய டிடிவி தினகரன், "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் குற்றங்கள், போதை கலாச்சாரம் ஆகியவை வெகுவாக அதிகரித்துள்ளன. ஆட்சியின் இந்த அவலங்களில் இருந்து மக்களை திசை திருப்பவே திமுக இந்தி எதிர்ப்பை கையில் எடுத்துள்ளது.
தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையையே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். அதைத்தான் நாங்களும் விரும்புகிறோம். அதே நேரத்தில் மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அறிவித்துள்ளது. மூன்றாவதாக ஒரு மொழியை படிக்க வேண்டும் என்று தான் மத்திய அரசு சொல்கிறது. இந்தியை தான் படிக்க வேண்டும் என்று மத்திய அரசு சொல்லவில்லை. எனவே இந்த விஷயத்தில் அரசியல் செய்யாமல் மத்திய அரசை அணுகி தேவையான நிதியை பெற தமிழக அரசு முயற்சிக்க வேண்டும். தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இந்தி கற்றுக் கொடுப்பதை தமிழக அரசால் ஒன்றும் செய்ய இயலாது.
எனவே அரசு பள்ளி மாணவர்களுக்கு சிபிஎஸ்சி-க்கு இணையான தரமான கல்வியை கொடுக்க முன்வர வேண்டுமே தவிர மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று அரசியல் செய்வதை திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம். பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இருக்கும்போது தமிழகத்தில் மட்டும் எப்படி அதிகாரம் இல்லாமல் போகும்?
இப்போதும் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் நீடிக்கிறோம். 2026 தேர்தலில் திமுகவை வீழ்த்துவதே எங்கள் நோக்கம். அதற்கான வியூகங்களை தான் தொகுத்து வருகிறோம். இத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி திமுக கூட்டணிக்கு எதிராக பலமான கூட்டணியாக இருக்கும்.
திமுக அரசின் அவலங்களை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியும் அறிக்கைகள் மூலமாகவும் ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்ற அறவழிகளிலும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் ஆட்சியாளர்கள் தூங்கிக் கொண்டிருப்பதால் எதிர்க்கட்சிகள் என்னதான் கூப்பாடு போட்டாலும் எதுவும் நடக்காது. வரும் தேர்தலில் திமுகவுக்கு கெட் அவுட் என மக்கள் தீர்ப்பளிப்பார்கள்" என்று கூறினார்.