அரசு மருத்துவர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் தகுதியற்ற 400 பேர் பங்கேற்றதாக குற்றச்சாட்டு

அரசு மருத்துவர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் தகுதியற்ற 400 பேர் பங்கேற்றதாக குற்றச்சாட்டு
Updated on
1 min read

சென்னை: அரசு மருத்துவர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் தகுதியற்ற 400 பேர் பங்கேற்றதாக மருத்துவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். தகுதியானவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,553 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) சார்பில் கடந்த ஜனவரி 5-ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. இதில், எம்பிபிஎஸ் முடித்த 24 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அதில் 14,855 பேர் தேர்ச்சி பெற்றனர். இதற்கிடையே, கூடுதலாக 89 காலி இடங்கள் கண்டறியப்பட்டதால், மொத்த காலி இடங்கள் எண்ணிக்கை 2,642 ஆக அதிகரிக்கப்பட்டது.

இதையடுத்து, சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள எம்ஆர்பி மற்றும் தேசிய நலவாழ்வு குழும அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி கடந்த 12-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 4,585 மருத்துவர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு பணி நியமனத்துக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. பின்னர், 2,642 மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார்.

இந்நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பில் தகுதியற்ற மருத்துவர்கள் பங்கேற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து தேர்வில் பங்கேற்ற மருத்துவர்கள் கூறியதாவது:

எம்ஆர்பி அறிவிப்பின்படி, கடந்த ஜூலை 15-ம் தேதிக்கு முன்பு தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்தவர்கள் மட்டுமே உதவி மருத்துவர் பணிக்கு தகுதி பெற்றவர்கள். ஆனால், அதற்கு பிறகு பதிவு செய்தவர்கள் பலரும் தேர்வில் பங்கேற்றுள்ளனர். அதில், 400-க்கும் மேற்பட்டோர் சான்றிதழ் சரிபார்ப்புக்கும் அழைக்கப்பட்டு, அதிலும் பங்கேற்றுள்ளனர். இதனால், தகுதியான மருத்துவர்கள் பலர் வாய்ப்பை இழந்துள்ளனர். அதேபோல, தரவரிசை பட்டியலும் வெளியிடப்படவில்லை.

எனவே, ‘தகுதியற்ற மருத்துவர்களை நீக்க வேண்டும். தரவரிசை பட்டியலை வெளியிட்டு வெளிப்படை தன்மையை உறுதி செய்ய வேண்டும்’ என்று தமிழக சுகாதாரத் துறை செயலர் மற்றும் எம்ஆர்பிக்கு மனு கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘எம்ஆர்பி அறிவித்தபடி, கடந்த ஜூலை 15-ம் தேதிக்கு முன்பு தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்த மருத்துவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியற்ற மருத்துவர்கள் நீக்கப்படுவார்கள். யாரும் கவலைப்பட வேண்டாம். தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாக, சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகுதான் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் விவரங்களுடன் இடஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட உள்ளது” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in