சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - ஒருவர் உயிரிழப்பு

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - ஒருவர் உயிரிழப்பு
Updated on
1 min read

சிவகாசி: சிவகாசி அருகே போடுரெட்டியபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

சிவகாசி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் கிச்சன்நாயக்கன்பட்டி அருகே போடுரெட்டியபட்டியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை (பெசோ) உரிமம் பெற்று ‘நீராத்திலிங்கம் ஃபயர் ஒர்க்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் உள்ள 40-க்கும் அதிகமான அறைகளில் 80-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று மாலை 5.30 மணி அளவில் அங்கு பட்டாசு உற்பத்தியின்போது உண்டான உராய்வு காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஓர் அறை முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. விபத்துக் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் பட்டாசு ஆலையில் பணிபுரிந்த ஆண் தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். திருத்தங்கலை சேர்ந்த பால்பாண்டி (30) என்ற தொழிலாளி 20 சதவீத தீக்காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து மாரனேரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in