சமூக வலைதளத்தில் பெண்கள் குறித்து அவதூறு பரப்பிய விவகாரம்: புகார்தாரருக்கு ஐகோர்ட் சம்மன்

மதுரை உயர்நீதி மன்றம் | கோப்புப் படம்
மதுரை உயர்நீதி மன்றம் | கோப்புப் படம்
Updated on
1 min read

மதுரை: சமூக வலைதளத்தில் பெண்கள் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தவர் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை நித்தியானந்தம் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: புதுக்கோட்டையைச் சேர்ந்த மருத்துவரான ராமதாஸ் என்பவர் என் மீது புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பொய் புகார் அளித்தார். பின்னர் அவர் என்னையும், எனது வயதான தாயாரையும் அச்சுறுத்தி வந்தார்.

இந்நிலையில் ராமதாஸ் என்னைப் பற்றி அவதூறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். நான் இல்லாத போது எனது வீட்டிற்கு வந்த ஒரு கும்பல் என்னை கொலை செய்வதாக எனது தாயாரிடம் கூறி சென்றுள்ளது. என் வீட்டிற்கு வந்த கும்பல் கடிதம் ஒன்றையும், பென்டிரைவ் ஒன்றையும் வீட்டில் போட்டுச் சென்றுள்ளனர். அதில் மிகவும் அசிங்கமான வார்த்தைகளையும், அவதூறான வார்த்தைகளையும் பேசியும், எழுதியும் உள்ளனர்.

அந்த பென்டிரைவை பார்த்த போது அதில் பெண்களைப் பற்றி மிகவும் அருவருக்கத்தக்க வகையில் ராமதாஸ் பேசி உள்ளார். இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் , மாநில மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்துள்ளேன். ஆனால் மாவட்ட காவல்துறை அவர் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. எனவே பெண்களைப் பற்றி அவதூறாக பேசிய ராமதாஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி தனபால் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், "மனுதாரர் புகார் அளித்தார். அதன் பின் போலீஸார் விசாரணைக்கு அழைத்த போது அவர் வரவில்லை" என தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிபதி, "மனுதாரர் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முன் விசாரணைக்கு ஆஜராகி தனது புகார் குறித்து விளக்க வேண்டும். அதன் அடிப்படையில் மனுதாரர் புகார் மனு குறித்து புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும், விசாரணையை ஒரு வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in