Published : 17 Feb 2025 01:33 PM
Last Updated : 17 Feb 2025 01:33 PM

நாடு கடத்தப்பட்ட இந்தியர்களை அழைத்துவர பிரதமர் முயற்சிக்காதது ஏன்? - செல்வப்பெருந்தகை

கு. செல்வப்பெருந்தகை | கோப்புப் படம்

சென்னை: நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் அநாகரிகமான முறையில் அழைத்து வரப்பட்டதை தடுக்கத் தவறிய பிரதமர் நரேந்திர மோடியை வன்மையாக கண்டிக்கிறேன். அமெரிக்க நாட்டு சட்டப்படி இப்படித் தான் நடந்து கொள்வார்கள் என்றால், நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் வருகையை முன்கூட்டியே அறிந்து வைத்திருக்கிற இந்திய பிரதமர், விமானத்தை அனுப்பி அவர்களை அழைத்து வர ஏன் முயற்சி செய்யவில்லை ? என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பாஜக ஆட்சியில் இந்தியாவுக்கு தலைகுனிவு ஏற்படுகிற வகையில் அமெரிக்காவிலிருந்து இரண்டாவது கட்டமாக நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு மீண்டும் கை, கால்களில் விலங்கு பூட்டி 109 பேர் ராணுவ விமானத்தில் அழைத்து வரப்பட்ட கொடுமை நிகழ்ந்துள்ளது. ஏற்கெனவே, கடந்த வாரம் 104 இந்தியர்கள் இந்த கொடுமையை அனுபவித்தனர். மீண்டும் சுமார் 40 மணி நேர பயணத்தின் போது கால்களில் விலங்கு பூட்டப்பட்டு, கைதிகளை போல மோசமாக நாடு கடத்தப்பட்டதாக தாயகம் திரும்பிய இந்தியர்கள் தங்களது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார். சமீபத்தில் அவரை பிரதமர் மோடி சந்தித்த போது இதுகுறித்து பேசியிருக்க வேண்டும். அமெரிக்க நாட்டு சட்டப்படி இப்படித் தான் நடந்து கொள்வார்கள் என்றால், நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் வருகையை முன்கூட்டியே அறிந்து வைத்திருக்கிற இந்திய பிரதமர், விமானத்தை அனுப்பி அவர்களை அழைத்து வர ஏன் முயற்சி செய்யவில்லை ?

அமெரிக்காவால் இத்தகைய அவமானத்தையும், இழிவையும் இந்தியர்கள் அனுபவிக்கிற சூழலில் டொனால்ட் ட்ரம்பை நரேந்திர மோடி கட்டித் தழுவி மகிழ்ச்சி காண்பதில் என்ன பெருமை இருக்கிறது ? நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் அநாகரிகமான முறையில் அழைத்து வரப்பட்டதை தடுக்கத் தவறிய பிரதமர் நரேந்திர மோடியை வன்மையாக கண்டிக்கிறேன். மேலும், பல இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்ற செய்தி அனைவரையும் மன வேதனையில் ஆழ்த்தி வருகிறது. இத்தகைய அவலநிலைக்கு நரேந்திர மோடி என்ன தீர்வு காணப் போகிறார் என்பதை நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை சுதந்திரம் தொடர்ந்து நசுக்கப்பட்டு வருகிறது. பத்திரிகையாளர்கள் பலர் ஆண்டுக்கணக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பத்திரிகைகள் சுதந்திரமாக செய்திகள் வெளியிட முடியவில்லை என்பதற்கு விகடன் இணைய தளம் முடக்கப்பட்டது சான்றாகும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இணையதள முடக்கத்துக்கு கண்டனம்: அதேபோல் விகடன் குழும இணையதள முடக்கம் அப்பட்டமான பாசிச நடவடிக்கை என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், “சில தினங்களுக்கு முன்பு அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அதை குறிப்பிட்டு, பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சந்திப்பை விகடன் தனது இணைய இதழின் முகப்பு அட்டையில் கார்ட்டூன் படமாக வெளியிட்டது. அதை சகித்துக் கொள்ள முடியாத ஒன்றிய பாஜக அரசு, பாரம்பரியமிக்க விகடன் குழுமத்திலிருந்து வெளிவருகிற இணைய தளத்தை முடக்கியது அப்பட்டமான பாசிச நடவடிக்கையாகும். இதை வன்மையாக கண்டிப்பதோடு, விகடன் இணையதள முடக்கத்தை உடனடியாக ஒன்றிய பாஜக அரசு திரும்ப பெற வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

‘ரயில்வே துறையின் படுதோல்வி’ - டெல்லி கூட்ட நெரிசல் குறித்து, “டெல்லி ரயில் நிலையத்தில் கும்பமேளாவுக்கு செல்ல முற்பட்ட பயணிகளிடையே கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்திருக்கிறது. கும்பமேளாவுக்கு தலைநகர் டெல்லியில் இருந்து செல்வதற்காக பயணிகள் காத்திருந்த போது ரயில் வருகை குறித்து நடைமேடை மாற்றத்திற்கான திடீர் அறிவிப்பு ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது.

இதனால் மாற்று நடைமேடைக்கு செல்வதற்காக படிகளில் ஏற முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு கூட்ட நெரிசல் ஏற்பட்டதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. டெல்லி ரயில் நிலையத்தின் அனைத்து நடைமேடைகளிலும் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கும் போது நடைமேடைக்கான மாற்று அறிவிப்பு வெளியிடப்பட்டதன் மூலம் இத்தகைய கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், ஒரு மணி நேரத்திற்கு 1500 பொது டிக்கெட்டுகள் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டதே கூட்ட நெரிசலுக்கு காரணமாக அமைந்து விட்டது. இது ரயில்வே துறையின் படுதோல்வியை காட்டுகிறது.” என்று செல்வப்பெருந்தகை குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x