

சென்னை: கடந்த காலங்களில் சிபாரிசுகள் அடிப்படையில் தரப்பட்ட பத்ம விருதுகள், தற்போதைய ஆட்சியில் வெளிப்படைத்தன்மையுடன் வழங்கப்படுகிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
நடப்பாண்டுக்கான பத்ம விருது பெறவுள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பத்ம விருதுகளை பெறவுள்ள நல்லி குப்பசாமி (தொழில்), ஷோபனா (கலை) உள்ளிட்டோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
தொடர்ந்து ஆளுநர் ரவி பேசியதாவது: விருதுபெற்ற அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி இந்த இடத்துக்கு வந்துள்ளனர். கடந்த காலங்களில் பத்ம விருதுகள் சில சிபாரிசுகள் அடிப்படையில் வழங்கப்பட்டன. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக உரிய தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே விருதுகள் தரப்படுகின்றன.
நான் உள்துறையில் பணியாற்றியபோது பத்ம விருதுகளுக்கு பல்வேறு பரிந்துரைகள் வரும். ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற பின்பு பத்ம விருதுகள் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் அரசு சாராத நடுவர் குழுவின் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. அதேபோல், சமூகத்தில் வெளியே தெரியாமல் சிறந்த சேவையை செய்பவர்களை மத்திய அரசு தேடி கண்டறிந்து பத்ம விருதுகளை வழங்குகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இருந்து பத்ம விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் தங்களது துறைகளில் சிறந்த பங்களிப்பை நமது நாட்டுக்கு அளித்துள்ளனர். அவர்களை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்க உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.