

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் எங்கள் கூட்டணி 234 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
தேமுதிகவின் 25-ம் ஆண்டு கொடிநாள் வெள்ளி விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதற்கு தலைமை தாங்கிய பிரேமலதா கொடியை ஏற்றி வைத்து, தொண்டர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து அவர் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அதன்பின் கேப்டன் முரசு மாத இதழையும், கேப்டன்.காம் என்ற இணையதளத்தையும் பிரேமலதா தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் கட்சியின் துணைச் செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி மற்றும் விஜயபிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பிரேமலதா கூறியதாவது: தேமுதிக கொடிநாள் வெள்ளி விழாவை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டு உள்ளோம். அதிமுகவுடன் கூட்டணி அமைத்தபோதே மாநிலங்களவை இடம் உறுதி செய்யப்பட்டது. மாநிலங்களவை தேர்தல் வரும்போது வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து விஜய்யிடம்தான் கேட்க வேண்டும்.
அதிமுகவில் செங்கோட்டையன் மற்றும் தலைமை இடையே நடைபெறும் நிகழ்வானது அவர்களின் உட்கட்சி பிரச்சினை. 2026 சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தமிழகத்தில் புதிதாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது நல்ல திட்டமாகும். ஜெயலலிதா இருந்தபோதும் இந்த திட்டம் இருந்தது. திமுக ஆட்சி முடிய இன்னும் 10 மாதங்களே உள்ளன. இத்தனை ஆண்டுகள் அமைதியாக இருந்துவிட்டு முதல்வர் மருந்தகம் திட்டம் அறிவிப்பது வெறும் தேர்தலுக்காகதான். இந்த திட்டம் வெறும் கண்துடைப்பாகும். இவ்வாறு அவர் கூறினார்.