

ஈரோடு: “கட்சி நிர்வாகிகளுடன் நான் எந்த ஆலோசனைக் கூட்டமும் நடத்தவில்லை” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
அத்திக்கடவு - அவினாசி திட்ட கூட்டமைப்பு சார்பில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு அன்னூரில் கடந்த 9-ம் தேதி பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும், கோபி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுமான கே.செங்கோட்டையன் பங்கேற்காமல் புறக்கணித்தார்.
அதிமுகவில் பரபரப்பு: இந்த விழா தொடர்பான அழைப்பிதழ்கள் மற்றும் மேடையில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெறாத நிலையில், “எனது உணர்வை வெளிப்படுத்தும் வகையில் விழாவில் பங்கேற்கவில்லை” என்று செங்கோட்டையன் விளக்கம் அளித்தார். இப்பிரச்சினை தொடர்பாக அதிமுக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான விவாதங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை , பச்சைமலை முருகன் கோயிலுக்கு சென்று வழிபட்ட செங்கோட்டையன், கோபி குள்ளம்பாளையத்தில் உள்ள தனது தோட்ட வீட்டில் ஓய்வு எடுத்தார். அவரது வீட்டிற்கு நேற்று இரவு முதல் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அதிமுகவினரிடையே விசாரித்தபோது, ‘தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று செங்கோட்டையன் காவல் துறையிடம் கோரவில்லை. உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் அவர்களாகவே பாதுகாப்பு பணியில் ஈடுபட வீட்டுக்கு வந்துள்ளனர்’ என தெரிவித்தனர்.
குவிந்த ஆதரவாளர்கள்: இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு செங்கோட்டையன் வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டுச் சென்றார். கோவையில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்றதாக தகவல் வெளியான நிலையில், புதன்கிழமை காலை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்குச் சென்று செங்கோட்டையன் சுவாமி தரிசனம் செய்தார். இதற்கிடையே, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தனது ஆதரவாளர்களோடு, செங்கோட்டையன் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தகவல் பரவியது.
அதற்கு ஏற்ப அந்தியூர் தொகுதியைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் செங்கோட்டையன் வீட்டின் முன் குவிந்து, செங்கோட்டையனுக்காக காத்திருந்தனர். பேரூர் கோயிலில் இருந்து கோபியில் உள்ள வீட்டுக்கு திரும்பிய செங்கோட்டையன், தான் பேரூர் கோயிலுக்கு சென்று விட்டு வருவதாகக் கூறி, அங்கு காத்திருந்த செய்தியாளர்களுக்கு கோயில் பிரசாதம் வழங்கினார்.
பொதுக்கூட்ட ஏற்பாடு: இதனைத் தொடர்ந்து அவர் கூறும்போது, “எனது வீட்டுக்கு தினமும் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் வருவதும், என்னை சந்தித்து பேசுவதும் வழக்கம் தான். நாளை (பிப்.13) அந்தியூரில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதற்கான அழைப்பிதழை வழங்குவதற்காக, நிர்வாகிகள் எனது வீட்டுக்கு திரண்டு வந்துள்ளனர். மற்றபடி, நான் எந்த ஆலோசனைக் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யவில்லை,” என்று அவர் தெரிவித்தார்.
இதன்பின், அதிமுக நிர்வாகிகள் செங்கோட்டையனை சந்தித்து பேசிவிட்டு, அவர் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். கடந்த இரு நாட்களாக செங்கோட்டையனின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், எந்த ஆலொசனையும் நடத்தவில்லை எனக்கூறி பரப்பரப்புக்கு செங்கோட்டையன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.