

தேனி: பஞ்சமி நிலத்தை ஓ.பன்னீர்செல்வம் வாங்கியது தொடர்பாக மாநில பட்டியலின மற்றும் பழங்குடியினர் ஆணைய உத்தரவு நகல் வந்ததும் சம்பந்தப்பட்ட இடம் கள ஆய்வு செய்யப்பட உள்ளது. மேலும் பட்டாவாக மாற்றம் செய்த வட்டாட்சியர், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 1991-ல் தேனி மதுரை சாலையில் உள்ள ராஜாகளம் என்ற இடத்தில் 40 சென்ட் பஞ்சமி நிலத்தை மூக்கன் என்பவருக்கு தமிழக அரசு வழங்கியது. அரசிடம் இருந்து பஞ்சமி நிலத்தை பெறும் பட்டியலினத்தவர் 15 ஆண்டுகளுக்கு அந்த நிலத்தை வேறு யாருக்கும் உரிமை மாற்றம் செய்ய முடியாது என்பது விதி. அதன் பிறகும் நிலத்தை பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே விற்க முடியும்.
இந்நிலையில், தனக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை பட்டியலினத்தை சாராத ஹரிசங்கர் என்பவருக்கு 2008-ல் மூக்கன் விற்றார். ஹரிசங்கரிடம் இருந்து இந்த நிலத்தை வாங்கிய முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தன் பெயரில் பட்டா வாங்கி உள்ளார். இதனைத் தொடர்ந்து மூக்கனின் மகன்கள் பாலகிருஷ்ணன், முத்துமணி ஆகியோர் பஞ்சமி நிலத்தில் முறைகேடு நடைபெற்றதாக மாநில பட்டியலின மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் புகார் செய்தனர். பட்டா மாற்றம் செய்தவர்கள் மற்றும் அதற்கு உதவிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இதை விசாரித்த ஆணையம் ஓ.பன்னீர்செல்வம் தன் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி பஞ்சமி நிலத்துக்கு பட்டா பெற்றுள்ளார். இதனை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் ரத்து செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து தேனி வட்டாட்சியர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான பணிகள் தொடங்கின.
இதுகுறித்து மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், மாநில பட்டியலின மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் உத்தரவு நகல் இதுவரை வரவில்லை. வந்ததும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள சர்வே எண், இடம் குறித்து நேரில் களஆய்வு செய்யப்படும். இதன் பின்பு மீண்டும் பஞ்சமி நிலமாக அது வகைப்படுத்தப்படும். இந்த முறைகேட்டில் ஈடுபட்ட வட்டாட்சியர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.