

ஓசூர்: அஞ்செட்டி அருகே தொட்டமஞ்சி மலைக் கிராமத்தில் மாணவிகள் பள்ளி இடை நிறுத்தம் செய்வதால், குழந்தைத் திருமணம் அதிகரித்துள்ளதோடு, பெண் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, இங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியைத் தரம் உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, தளி உள்ளிட்ட மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு சாலை மற்றும் பேருந்து வசதிகள் இல்லாததால், கல்வி உள்ளிட்ட அனைத்திலும் பின்தங்கி உள்ளனர்.
குறிப்பாக, தளி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட தொட்டமஞ்சி மலைக் கிராமம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. இம் மலைக் கிராமத்தில் ஒன்னேபுரம், சித்தப்பனூர், சிக்கமஞ்சி, கிரியானூர், பெல்லட்டி, தொட்டமஞ்சி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சிறிய கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இப்பகுதியில் உள்ள மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்கு 20 கிமீ தொலைவில் உள்ள அஞ்செட்டிக்கு சென்று, அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர். அதேபோல, தொட்டமஞ்சி கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி மட்டும் செயல்படுவதால், மேல்நிலைக் கல்விக்கு மாணவ, மாணவிகள் அஞ்செட்டிக்கு தினசரி சென்று வருகின்றனர். இதனால், நீண்ட தூரம் சென்று படிக்க மாணவிகளை அனுப்பப் பெற்றோர் தயங்கி வருகின்றனர். இதனால், மேல்நிலை கல்வி என்பது இக்கிராம மாணவிகளுக்கு எட்டாக்கனியாக இருந்து வருகிறது.
இது தொடர்பாக கல்வியாளர்கள் கூறியதாவது: தொட்டமஞ்சி மலைக் கிராமத்தில் ஆண்களை விட பெண்கள் 60 சதவீதம் அதிகம் உள்ளனர். இங்கு மொத்த எழுத்தறிவு 22.4 சதவீதமாக உள்ள நிலையில், பெண்களின் எழுத்தறிவு 8 சதவீதமாக உள்ளது. தொட்டமஞ்சி மலைக் கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் சுற்றி உள்ள கிராமப் பகுதியைச் சேர்ந்த மாணவ ,மாணவிகள் கல்வி பயின்று வரும் நிலையில், மேல்நிலை கல்விக்கு அஞ்செட்டி செல்ல வேண்டியது உள்ளதால், மாணவிகள் கல்வியைத் தொடர முடியாமல் இடைநிறுத்தம் செய்யும் நிலையுள்ளது.
மேலும், இங்குள்ளவர்கள் பெரும்பாலும் வெளியூர்களில் தங்கி கூலி வேலைக்கு செல்வதால், பெண் குழந்தைகளை வீட்டில் தனியாக இருக்க வேண் டும் என்பதால், இளம் வயதி லேயே திருமணம் செய்து வைக்கின்றனர். இப்பிரச் சினையைத் தீர்க்க தொட்டமஞ்சி அரசு உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த கல்வித் துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தோம். ஆனால், மாணவிகள் வருகை குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி தரம் உயர்த்தவில்லை.
எனவே, மாணவிகளின் கல்வியை மேம்படுத்த ஆட்சியர் இப்பள்ளியை ஆய்வு செய்து, தரம் உயர்த்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுதொடர்பாக தொட்டமஞ்சி உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் கூறும்போது, “கடந்தாண்டு 10-ம் வகுப்பில் 48 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
இதில், 30 பேர் மட்டுமே அஞ்செட்டிக்கு சென்று பிளஸ் 2 படித்து வருகின்றனர். மேல்நிலை கல்வியை 18 மாணவிகள் தொடர முடியாமல் கைவிட்டுள்ளனர். இம்மாணவிகளுக்கு மேல்நிலை வகுப்பு படிக்க ஆர்வம் உள்ளது. ஆனால், அவர்களது பெற்றோர்கள் நீண்ட தூரம் சென்று படிக்க அனுப்ப விரும்பவில்லை. எனவே, இப்பள்ளியைத் தரம் உயர்த்த கல்வித் துறைக்குப் பரிந்துரை செய்துள்ளோம்” என்றனர்.