Published : 11 Feb 2025 09:13 PM
Last Updated : 11 Feb 2025 09:13 PM
மதுரை: மதுரை - அலங்காநல்லூர் கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் துள்ளி திமிறிய காளைகளை வீரர்கள் அடக்கி பரிசுகளை வென்றனர்.
பொங்கலை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுாரில் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் பதிவு செய்யும் காளைகள் போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் உருவானது.
இதை தவிர்க்கும் விதமாக ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அலங்காநல்லூர் அருகிலுள்ள கீழக்கரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்பட்டது. 3 ஜல்லிக்கட்டிலும் பங்கேற்க வாயப்பு கிட்டாத காளைகளை கொண்டு இவ்வரங்கில் கடந்த ஆண்டு முதன் முறையாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இப்போட்டியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், இவ்வாண்டுக்கான அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் ஆன்லைனில் பதிவு செய்து இருந்தன. ஒவ்வொரு போட்டியிலும் தலா 900-க்கும் மேற்பட்ட காளைகள் மட்டுமே அவிழ்க்க முடிந்தது. எஞ்சிய காளைகளுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. குறிப்பாக தென்மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்போருக்கு வாய்ப்பளிக்கும் வகையில் கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் 2-வது ஆண்டாக இரண்டு நாள் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளையொட்டி மதுரை கிழக்கு தொகுதி சார்பில், நடக்கும் இப்போட்டியில் கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட காளைகள் பங்கேற்கும் வகையில் 900-க்கும் மேற்பட்ட காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் களமிறக்கப்பட்டனர். தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி இன்று (பிப்.11) காலை 7 மணிக்கு கொடி அசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.
முன்னதாக அமைச்சர், அதிகாரிகள் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். மருத்துவக் குழுவினரின் சோதனைக்கு பிறகு வாடிவாசலில் காளைகள் தொடர்ந்து அவிழ்த்துவிடப்பட்டன. சீறி பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கி பல்வேறு பரிசு பொருட்களை வென்றனர். சில காளைகள் தங்களது திமிலை பிடிக்க பாய்ந்த வீரர்களை துச்சமென தூக்கி வீசிவிட்டு உரிமையாளர்களுக்கு பரிசுடன் பெயர், புகழை பெற்றுக் கொடுத்தன. வாடிவாசல் அருகே ஓடாமல் நின்று கெத்து காட்டிய சில காளைகள் மாடுபிடி வீரர்களை திக்குமுக்காடச் செய்தன.
இன்னும் சில காளைகள் வீரர்களை அருகில் நெருங்கவிடாமலும் போக்கு காட்டி தெறிக்கவிட்டன. ‘இந்த காளையை பிடித்து பார்’ என்ற சவாலுடனும் அவிழ்க்கப்பட்ட சில காளைகளை வீரர்கள் சபதமிட்டு திமிலை பிடித்து அடக்கினர். காளைகள் முட்டியதில் வீரர்கள் சிலர் காயம் அடைந்தாலும் அசராமல் களத்தில் நின்று சீறிய பாய்ந்து களமாடிய காளைகளை அடக்கியது கண்டு பார்வையாளர்கள் பரவசம் அடைந்தனர். கைதட்டி உற்சாகப்படுத்தினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், களத்தில் நின்று விளையாடிய வீரர்களிடம் சிக்காமல் தப்பிய காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கக்காசு, சைக்கிள், எல்இடி டிவி, பீரோ, மெத்தை, பிரிட்ஜ், கட்டில், மிக்சி, கிரைண்டர், மின்விசிறி போன்ற பல்வேறு பரிசுகளும் வழங்கினர்.
மாலை 3 மணி வரையிலும் காளைகள் முட்டியதில் 18 வீரர்கள், 15 உரிமையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் உட்பட 36-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களில் 10 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். காலை 7 மணிக்கு தொடங்கிய இப்போட்டி மாலை 4.30 மணி வரையிலும் நடந்தது. மொத்தம் 932 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 375 வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.
கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் ஒரே நேரத்தில் சுமார் 5 ஆயிரம் பார்வையாளர்கள் வரையிலும் கண்டு ரசிக்கும் வசதி உள்ள நிலையில் மதுரை உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளித்தனர். தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா மேற்பார்வையில் மதுரை எஸ்பி அரவிந்த் தலைமையில் 2 கூடுதல் டிஎஸ்பிக்கள், 4 டிஎஸ்பிக்கள் அடங்கிய 600-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இப்போட்டிக்காக மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய 50 பேர் கொண்ட மருத்துவக் குழுவினரும், நான்கு 108 ஆம்புலன்ஸ்களுடன் 23 பேர் கொண்ட கால்நடை மருத்துவ குழுவினரும், கால்நடைக்கான ஆம்புலன்ஸ் மற்றும் அலங்காநல்லூர், சோழவந்தான் தீயணைப்பு துறையினரும் தீயணைப்பு வாகனங்களும் ஜல்லிக்கட்டு அரங்கம் அருகே நிறுத்தி இருந்தனர்.
இப்போட்டியை காண வரும் மக்களுக்கென சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. நாளையும் (பிப்.12) அதே அரங்கில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT