

“அனைவருக்கும் மகிழ்ச்சியான, ஆசிர்வதிக்கப்பட்ட தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்! இந்த நாள் நமது வாழ்க்கையில் அமைதியையும், செயலூக்கத்தையும் கொண்டுவரட்டும்! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!” என்று பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தைப்பூச வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.
பிரதமர் மோடி பகிர்ந்துள்ள ட்வீட்டில், “அனைவருக்கும் மகிழ்ச்சியான, ஆசிர்வதிக்கப்பட்ட தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்! முருகப் பெருமானின் தெய்வீக அருள் நமக்கு பலம், வளம், ஞானம் ஆகியவற்றுடன் வழிகாட்டட்டும். இந்தப் புனித விழாவில் அனைவரின் மகிழ்ச்சிக்காக, நல்ல ஆரோக்கியத்திற்காக, வெற்றிக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். இந்த நாள் நமது வாழ்க்கையில் அமைதியையும், செயலூக்கத்தையும் கொண்டுவரட்டும்! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!” என்று குறிப்பிட்டுள்ளார்.
முருகக் கடவுளைக் கொண்டாடவும் வழிபடவும் பல விழாக்கள் இருக்கின்றன. விசேஷங்கள் ஏராளம் அமைந்துள்ளன. ஆடிக் கிருத்திகையும், ஐப்பசி சஷ்டியும், வைகாசி விசாகமும், பங்குனி உத்திரமும் என முருகப்பெருமானுக்கு திருவிழாக்கள் ஏராளம். இந்த விழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா. தை மாதத்தில் வருகிற பூசத் திருநாள் தைப்பூச விழாவாக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தநாளில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் விமரிசையாக நடைபெறும். அதுமட்டுமின்றி, முருகப்பெருமான் குடி கொண்டிருக்கும் தலங்களில் விசேஷ பூஜைகள் நடைபெறும். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தைப்பூச வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.