சென்னைக்கான முதல் ஏசி மின்சார ரயில் ரெடி! - சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னைக்கான முதல் ஏசி மின்சார ரயில் ரெடி! - சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
Updated on
1 min read

சென்னை: தெற்கு ரயில்வேயில் சென்னை ரயில்வே கோட்டத்துக்கான முதல் ஏசி மின்சார ரயில் தயாரிக்கும் பணி ஐ.சி.எஃப் ஆலையில் நிறைவடைந்து, தெற்கு ரயில்வேயிடம் ஒப்படைக்க தயாராக இருக்கிறது.

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் விரைவுப் பாதையில் ஏ.சி.மின்சார ரயில் இயக்க ரயில்வே வாரியத்திடம் தெற்கு ரயில்வே கடந்த 2019-ம் ஆண்டு பரிந்துரை செய்தது. இத்தடத்தில் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் ஏ.சி. ரயில் இயக்கத்தின் தேவை, அதிக மக்கள் பயணிக்கும் ரயில் நிலையங்களின் பட்டியலையும் அனுப்பியது. இதையடுத்து, ஏசி மின்சார ரயில்களை தயாரித்து வழங்க சென்னை ஐ.சி.எஃப்-க்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில், சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் தெற்கு ரயில்வேயில் சென்னை கோட்டத்துக்காக, 12 பெட்டிகள் கொண்ட ஏசி மின்சார ரயில் தயாரிப்புப் பணி கடந்த மாதம் தொடங்கி, நடைபெற்றது வந்தது. தற்போது, இந்த ரயில் தயாரிப்புப் பணி நிறைவடைந்துள்ளது.

இது குறித்து சென்னை ஐசிஎஃப் அதிகாரிகள் கூறும்போது, ''சென்னைக்கு இரண்டு ஏசி மின்சார ரயில் தயாரிக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டது. தற்போது, முதல் ஏசி மின்சார ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. 12 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் முழுமையாக குளிர்சாதன வசதி கொண்டது. 12 பெட்டிகள் கொண்ட இந்த ஏசி ரயிலில் மொத்தம் 1,116 பேர் அமர்ந்து செல்லலாம். 3,798 பேர் நின்று கொண்டும் பயணிக்க முடியும்.

அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. தானியங்கி கதவுகள், ஜி.பி.எஸ்., அடிப்படையிலான தகவல் வசதி மற்றும் அறிவிப்பும் உள்ளன. அனைத்து ரயில் பெட்டிகளிலும் சி.சி.டிவி. கேமராக்கள் இருக்கும். இந்த ரயில், தெற்கு ரயில்வேயிடம் விரைவில் ஒப்படைக்கப்பட உள்ளது'' என்று அவர்கள் கூறினர்.

இந்த ஏசி மின்சார ரயில் தெற்குரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டத்துக்கான முதல் ரயிலாகும். இந்த ரயில் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு தடத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in