‘பிங்க்’ ஆட்டோ திட்​டத்​தில் திறன் மேம்​பாட்டு கழகம் மூலம் சென்னை​யில் 250 பெண் ஓட்டுநர்​களுக்கு பயிற்சி

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: ‘பிங்க்’ ஆட்டோ திட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் சென்னையில் 250 பெண் ஓட்டுநர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாகவும் அரசு மானியத்துடன் ‘பிங்க்’ ஆட்டோக்களை இயக்கும் திட்டம் கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் சமூக நலத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தின்படி ஆட்டோ வாங்குவதற்காக அரசு மானியமாக தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் 250 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கப்படும். அந்த வகையில் சென்னையில் வசிக்கும் ஓட்டுநர் உரிமம் பெற்ற 25 முதல் 45 வயதுக்குட்பட்ட பெண்கள் இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டிருந்தது.

அதன்படி 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பிங்க் ஆட்டோ திட்டத்துக்கு கடந்த டிச.10-ம் தேதி வரை விண்ணப்பித்திருந்தனர். இதில் தேர்வு செய்யப்பட்ட தகுதியுள்ள 250 பேருக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

முதல்கட்டமாக அண்ணாநகர் வட்டார போக்குவரத்து கழக பயிற்சி வளாகத்தில் பெண்களுக்கு ஓட்டுநர் பயிற்சி வழங்கப்பட்டது. தொடர்ந்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் ஆட்டோக்களை பாதுகாப்பாக இயக்குவது, சுய தற்காப்பு, டிஜிட்டல் முறையில் பணம் பெறுவது, தனியார் ஆட்டோ செயலிகளை பயன்படுத்தும் முறை, ஆட்டோக்களில் இணைக்கப்பட்டிருக்கும் ஜிபிஎஸ் கருவியை பயன்படுத்தி அவசர காலங்களில் காவல்துறையை தொடர்பு கொள்வது குறித்த விழிப்புணர்வு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

அதனடிப்படையில் இதுவரை 114 பெண் ஓட்டுநர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக மீதமுள்ள பெண் ஓட்டுநர்களுக்கும் பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சென்னையில் பிங்க் ஆட்டோக்களை இயக்கும் திட்டமானது இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in