“மிகக் குறைந்த சதவீதத்தில் டெபாசிட் இழந்துள்ளோம்!” - நாதக வேட்பாளர் சீதாலட்சுமி

“மிகக் குறைந்த சதவீதத்தில் டெபாசிட் இழந்துள்ளோம்!” - நாதக வேட்பாளர் சீதாலட்சுமி
Updated on
1 min read

ஈரோடு: “இந்த தேர்தலை பெரியாரா அல்லது பிரபாகரனா என்ற பிரகடனத்துடன் சந்தித்தோம். இதில், பிரபாகரன் வென்றுள்ளார் என்று கருதுகிறேன்” என நாதக வேட்பாளர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி கூறியது: “நாம் தமிழர் கட்சிக்கு 24 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் கிடைத்துள்ளது. நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தலை விட 14 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளது. எங்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி.

இந்தத் தேர்தலை பெரியாரா அல்லது பிரபாகரனா என்ற பிரகடனத்துடன் சந்தித்தோம். இதில், பிரபாகரன் வென்றுள்ளார் என்று கருதுகிறேன். ஈரோடு மண் தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன், நம்மாழ்வார்,காலிங்கராயன் மண் என நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த தேர்தலில் நாங்கள் வெற்றியடைந்துள்ளோம். விலைபோகாத வாக்குகளை எங்களுக்கு வழங்கி வாக்காளர்கள் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப்பதிவின்போது, கள்ள வாக்குகள் செலுத்தப்பட்டன.

வாக்குக்கு பணம் கொடுத்தும், மிரட்டல் விடுத்தும் திமுக நெருக்கடி கொடுத்து இந்த வெற்றியைப் பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு விழுந்த வாக்குகள், இந்த மண்ணில் மாற்றத்துக்கு கிடைத்த வாக்குகள். எங்கள் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்குக்காக பிரச்சாரம் செய்யவில்லை. அடுத்த தலைமுறை வாழ்வதற்கு தேவையான அரசியலைப் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மிகக் குறைந்த சதவீதத்தில் கட்டுத் தொகையை (டெபாசிட்) இழந்துள்ளோம். நாங்கள் பெற்ற வாக்குகள் எங்களை இன்னும் வீரியமாக செயல்பட உதவியாக இருக்கும். பாஜக வாக்குகள் எனக்கு விழுந்தது என்று உறுதியாக சொல்ல முடியாது. நோட்டாவுக்கும் கணிசமாக வாக்குகள் விழுந்து உள்ளது. என் மீது போடபட்டுள்ள வழக்குகளை நீதிமன்றத்தில் சந்திப்பேன்” என்று அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in