Published : 07 Feb 2025 06:22 AM
Last Updated : 07 Feb 2025 06:22 AM
சென்னை: தமிழக கடலோர பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில், வனத்துறை சார்பில் கால்நடை மருத்துவர்களுக்கு கடல் ஆமைகளை பிரேத பரிசோதனை செய்ய நேற்று முன்தினம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
கடல் வள பாதுகாப்பு மற்றும் மீன் வளத்தை பெருக்குவதில் கடல் ஆமைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆழ்கடலுக்கு செல்லும் இவை, இனப்பெருக்கம் செய்வதற்காக டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை தமிழகம் முதல் ஒடிஷா கடலோர பகுதிகளில் நோக்கி வந்து, முட்டையிட்டு வருகின்றன.
இந்நிலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழக கடலோர பகுதிகளில் மட்டும் 1000-க்கும் மேற்பட்ட கடல் ஆமைகளும், ஆந்திர கடலோர பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆமைகளும் இறந்து அழுகிய நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன. இது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாக கால்நடை மருத்துவர்கள் வன உயிரினங்களான புலி, யானை, சிறுத்தை, மான் போன்றவற்றுக்கு பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர். அதில் நிபுணத்துவமும் பெற்றுள்ளனர். ஆனால் கடல் ஆமை பிரேத பரிசோதனையில் போதிய அனுபவம் இல்லாமல் இருப்பதை கருத்தில் கொண்டு, வனத்துறை சார்பில் வண்டலூரில் உள்ள உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனத்தில் நேற்று முன்தினம் கடல் ஆமை பிரேத பரிசோதனை பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில் கால்நடை அறிவியல் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பங்கேற்று, தமிழக கடலோர பகுதிகளை சேர்ந்த கள கால்நடை மருத்துவர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட 25 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இதில் கடல் ஆமைகளின் உயிரியல், உடலியல் மற்றும் உடற்கூறியல் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. கடல் ஆமையின உடற்கூறாய்வு குறித்தும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT