“வாக்குச்சாவடி முகவர்களை வெளியேற்றி திமுக அராஜகம்!” - ஈரோடு கிழக்கு நாதக வேட்பாளர் குற்றச்சாட்டு

ஈரோடு கிழக்கு நாதக வேட்பாளர் சீதாலட்சுமி
ஈரோடு கிழக்கு நாதக வேட்பாளர் சீதாலட்சுமி
Updated on
1 min read

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குபதிவின்போது, நாதக வாக்குச்சாவடி முகவர்களை வெளியேற்றி விட்டு திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டதாக அக்கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி குற்றம்சாட்டினார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கு, இன்று (பிப்.5) காலை முதல் நாதக வேட்பாளர் சீதாலட்சுமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு சதவீதம் குறித்து அவர் கேட்டறிந்தார். இந்நிலையில் இன்று மாலை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இயங்கும் தேர்தல் பிரிவு அலுவலகம் வந்த சீதாலட்சுமி கூறியது: “ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப்பதிவின்போது, வாக்குச்சாவடி முகவராக பணிபுரிய, நாதக சார்பில் இளைஞர்கள், பெண்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். இவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு திமுகவினர் நேற்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால், 70 சதவீத வாக்குச்சாவடிகளுக்கு மட்டும் நாதக முகவர்கள் பணியில் இருந்தனர். மதியம் வரை 50 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், நாதக-வுக்கு மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளது தெரியவந்துள்ளது. இதைப் பொறுக்க முடியாமல், வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் நாதக முகவர்களை மிரட்டி வெளியில் அனுப்பும் பணியில் திமுகவினர் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்ற அராஜகங்களில் திமுகவினர் ஈடுபடுவார்கள் என்பதால்தான் அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன. நாதக மக்களை நம்பி இந்த தேர்தல் களத்தை சந்திக்கிறது.

இந்தத் தேர்தல் முறையாக நடக்க வேண்டும் என்பதற்காக நான் தீக்குளிக்கவும் தயாராக இருக்கிறேன். ஒரு சில காவல் துறையினர், தேர்தல் அலுவலர்களைத் தவிர பணியில் உள்ள இதர அலுவலர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால், அவர்கள் ஆளுங்கட்சியான திமுகவை மீறி எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தல் வாக்குப்பதிவின் போது கண்ணியமற்ற முறையில் திமுக நடந்து தனது சுயரூபத்தை வெளிப்படுத்தியுள்ளது. சில இடங்களில் கள்ள வாக்கு பதிவானதால், உண்மையான வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்” என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in