

மதுரை: ராமேசுவரத்தில் அமைந்துள்ள பாம்பன் புதிய ரயில்வே பாலத்தை பிப்ரவரி 11-ல் திறக்க ஏற்பாட்டுப் பணிகள் தீவிரமாகியுள்ளன. புதிய பாலத்தில் முதல் ரயில் போக்குவரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் - மண்டபம் இடையே பாம்பன் கடலில் ஏற்கெனவே இருந்த பழைய தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புதிய பாலம் அமைக்க ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுத்தது. இதற்காக 2022-ல் அப்பாலத்தில் ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் தடை செய்தது. தொடர்ந்து 2023 பிப்ரவரி முதல் பழைய பாலத்தில் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. ராமேசுவரம் செல்லும் சேது எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் மண்டபம் ரயில் நிலையம் வரையிலுமே இயக்கப்பட்டன.
ரூ.550 கோடியில் பாம்பன் கடலில் புதிய இரட்டை வழித்தட மின்சார ரயில் பாலம் அமைக்கும் பணி தொடர்ந்து நடந்தது. கடந்தாண்டு இறுதியில் பணிகள் நிறைவுற்றன. பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு புதிய ரயில் பாலம் திறப்பு விழாவிற்கு தயாரானதால் இதன் திறப்பு விழாவை ராமேசுவரம் மக்களும், ரயில் பயணிகளும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், பராமரிப்பு பணிக்கென கடந்த 31-ம் தேதி மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் இன்றி 18 காலி பெட்டிகளுடன் விரைவு ரயில் சுமார் 60 கிமீ வேகத்தில் புதிய ரயில் பாலத்தில் இரு மார்க்கத்திலும் இயக்கி சோதனை நடத்தினர். தூக்குப்பாலமும் பரிசோதிக்கப்பட்டு அதிகாரிகள் ஒத்திகை பார்த்தனர். இதற்கிடையில், புதிய பாம்பன் ரயில் பாலத்தில் அனைத்து சோதனைகளும் நிறைவு பெற்ற நிலையில் தைப்பூச தினமான பிப்ரவரி 11-ம் தேதி புதிய பாலத்தை திறக்க திட்டமிட்டு விழாவுக்கான ஆரம்பக்கட்ட பணி நடக்கிறது. விழாவில் பிரதமர் மோடி, ரயில்வே அமைச்சர், தமிழக அமைச்சர்கள் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.
மண்டபம் பகுதிக்கு வரும் பிரதமர், இந்திய கடலோர காவல்படை நிலையத்தில் இருந்து கப்பல் மூலம் பாம்பனுக்கு சென்றும், அங்கிருந்து கப்பல் மூலம் சென்று புதிய ரயில் பாலத்தில் ரயில் போக்குவரத்தை பிரதமர் தொடங்கி வைக்கும் விதமாகவும் நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “புதிய பாம்பன் பாலத்துக்கான அனைத்து பணிகளும் நிறைவுற்று திறப்பு விழாவுக்கான ஏற்பாடு நடக்கிறது. பிப்ரவரி 11-ல் பாலம் திறக்க திட்டமிடப்படுகிறது. டெல்லி சட்டமன்ற தேர்தல் ரிசல்ட் மற்றும் 12-ம் தேதி வெளிநாடு செல்ல இருப்பதால் பிரதமர் நேரில் பங்கேற்கிறரா அல்லது காணொளியில் பங்கேற்பதா என்ற இறுதி தகவல் இன்னும் எங்களுக்கு வரவில்லை.
ஒருவேளை பிரதமர் வரவில்லை என்றால் ரயில்வே அமைச்சர் உறுதியாக ராமேசுவரம் விழாவில் பங்கேற்பார். விழாவுக்கான முன்னேற்பாடுகளும் நடக்கின்றன. பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள், இன்னும் ஓரிரு தினத்தில் ராமேசுவரம், மண்டபம் பகுதிக்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு இருப்பதாகவும் தகவல் உள்ளது,'' என்றனர்.