

ஈரோடு: “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள பொதுத்தேர்தல் வெற்றிக்கான முன்னோட்டம்” என திமுக வேட்பாளர் சந்திரகுமார் கூறியுள்ளார்.
ஈரோடு சூரம்பட்டி நான்கு சாலை சந்திப்பு பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்திய பின் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் கூறியதாவது: "வட மாநிலங்களில் பாஜகவினர் சிலரை ராஜினாமா செய்ய வைத்து, சில தொகுதிளில் தேர்தல் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை, திருமகன் ஈவெரா, ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோரது மறைவினால் ஈரோடு கிழக்கு தொகுதியில் இரு முறை இடைத்தேர்தல் நடந்துள்ளது. இது திணிக்கப்பட்ட தேர்தல் அல்ல.
எனவே, பொதுமக்களிடம் தேர்தல் குறித்து எந்த அதிருப்தியும் இல்லை. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட 33 வார்டுகளில் நானும் அமைச்சர் முத்துசாமியும், 140 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மக்களை நேரடியாகச் சந்தித்து வாக்கு சேகரித்துள்ளோம். அவர்கள் இந்த ஆட்சியின் மீது எந்த அதிருப்தியும் தெரிவிக்கவில்லை. சில இடங்களில், சில கோரிக்கைகளை முன் வைத்தனர். அவற்றை செய்து தருவதாக நாங்கள் உறுதி அளித்துள்ளோம்.
ஈரோடு நகரில் 200 கிலோ மீட்டர் அளவுக்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியின்போது 75 சதவீத பணிகள் மட்டுமே பாதாள சாக்கடை திட்டத்தில் செய்யப்பட்டது. அதையும் நாங்கள் நிறைவேற்றி உள்ளோம். ஈரோடு மக்களின் குரலுக்கு செவிமடுத்து, அமைச்சர் முத்துசாமி, உடனுக்குடன் ஈரோடு மாவட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு வருகிறார். எனவே, மக்களிடம் பெரும் ஆதரவு இருக்கிறது.
எங்களது நான்காண்டு திமுக அரசின் சாதனைகளை குறிப்பாக தமிழ் புதல்வன், புதுமைப்பெண், மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம் போன்ற பல திட்டங்களை கூறி வாக்குகளை சேகரிக்கிறோம். திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மிகப்பெரிய வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம்
கடந்த இடைத்தேர்தலின் போது, அரசின் மீது சில குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் சுமத்தின.
அதற்கு பதில் அளிக்க முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் இங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்த இடைத்தேர்தலில் உள்ளூர் கட்சி நிர்வாகிகளை கொண்டு தேர்தலை சந்திக்க முதல்வர் மற்றும் துணை முதல்வர் உத்தரவிட்டனர். எனவே, வெளி மாவட்டங்களில் இருந்து அமைச்சர்களோ வேறு நிர்வாகிகளோ தேர்தல் பிரச்சாரத்திற்கு வரவில்லை.எதிர்க்கட்சிகள் தேர்தல் புறக்கணிப்பு என்பது அவர்களுக்கு விருப்பம். ஈரோடு கிழக்கில் நேரடியாக கட்சிகள் களம் காணாமல், வேறு சிலரை வைத்து தேர்தலை சந்திக்கிறார்கள் என்று முதல்வர் கூறியுள்ளார்,” என்று அவர் தெரிவித்தார்.
ஒரே நாடு ஒரே தேர்தல்: ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக போட்டியிடாமல் புறக்கணித்துள்ளது. இருப்பினும், பாஜக தொண்டர்கள் தங்களது ஜனநாயக கடமையை மனச்சாட்சிப்படி ஆற்றுவார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருந்தார். இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் வசிக்கும், மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ, சி.சரஸ்வதி, சிஎஸ்ஐ பள்ளி வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து அவர் கூறியதாவது: “ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 4 ஆண்டுகளில் இது மூன்றாவது தேர்தலாகும். இவ்வாறு அடிக்கடி தேர்தல் நடப்பதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அரசுக்கும் வீண் செலவு ஏற்படுகிறது. அரசின் நிர்வாகம் பாதிக்கிறது. எனவே, ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை அமலாக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும்.பாஜக தேர்தலை புறக்கணித்தாலும் ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக வாக்களிக்க வந்துள்ளேன்,” என்று அவர் கூறினார்.