ராயபுரம் - புதுடெல்லி படேல் நகர் இடையே முதன்முறையாக சரக்கு ரயில் சேவை: ஒரு சுற்று பயணத்தில் ரூ.25 லட்சம் வருவாய் கிடைக்கும்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை ராயபுரம் - புதுடெல்லி படேல் நகர் இடையே முதன்முறையாக சரக்கு ரயில் (பார்சல் கார்கோ விரைவு ரயில்) போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. ஒரு சுற்று பயணம் மூலமாக, குறைந்தபட்சம் ரூ.25 லட்சம் ரயில்வேக்கு வருவாய் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெற்கு ரயில்வேயில் சென்னை ரயில்வே கோட்டத்தில் சரக்கு ரயில் போக்குவரத்தை மேம்படுத்த கடந்த 2020-ம் ஆண்டுக்கு பிறகு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, நவீன வசதிகள் கொண்ட சரக்கு ரயில்கள் அறிமுகப்படுத்தல், சரக்குகளை கையாள மேம்படுத்த ரயில் நிலையத்தை உருவாக்குதல், வணிக மேம்பாட்டுக் குழு அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, சரக்கு ரயில் போக்குவரத்து வேகமாக வளரத் தொடங்கியது. தற்போது, சென்னையில் இருந்து நாட்டின் பல நகரங்களுக்கு சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், சென்னை ராயபுரம் - புதுடெல்லி படேல் நகர் இடையே முதன்முறையாக சரக்கு ரயில் (பார்சல் கார்கோ விரைவு ரயில்) போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, ராயபுரத்தில் இருந்து புதுடெல்லி படேல் நகர் ரயில் நிலையத்துக்கு சரக்கு ரயில் சேவையை சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா அண்மையில் தொடங்கி வைத்தார். இதன்மூலம், ரயில்வேக்கு ஆண்டுதோறும் கணிசமான வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: இந்த சரக்கு ரயில் இயக்க ஆறு ஆண்டுகால ஒப்பந்தம் ரயில் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா-க்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு சுற்று சரக்கு ரயில் போக்குவரத்து மூலமாக, குறைந்தபட்சம் ரூ.25 லட்சம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாரத்துக்கு இரண்டு சுற்று பயணம் மேற்கொள்ள ஒப்பந்ததாரர் முன்மொழிந்துள்ளார். இதன்மூலம், 6 ஆண்டுகளுக்கு ரூ.208 கோடி வருவாய் கிடைக்கும்.

இந்த சரக்கு ரயிலில் வாகன உதிரிபாகங்கள், கைத்தறி, டயர்கள், கூரியர் பொருட்கள் போன்றவை எடுத்துச்செல்லப்படும். இந்த சரக்கு ரயில் ராயபுரத்தில் இருந்து புறப்பட்டு 2,195 கி.மீ. தொலைவு சென்றடையும். இதன்மூலம், தென்பகுதியை இந்தியாவின் வடக்குப்பகுதிகளுடன் இணைக்கும்.இந்த சேவை, பிராந்தியங்ளுக்கு இடையே வர்த்தகத்தை ஊக்குவிக்கும். உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்தும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in