

வல்லநாட்டில் வீடு ஜப்தி செய்யப்பட்டதால் லாரி ஓட்டுநர் தற்கொலை செய்ததற்கு நீதி கேட்டு நேற்று கடையடைப்பு, சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சங்கரன்(45). லாரி ஓட்டுநர். இவரது மனைவி பத்ரகாளி (43). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். தனியார் நிதி நிறுவனத்தில் வீட்டை அடமானம் வைத்து வாங்கிய கடனுக்கான தவணைத் தொகையை செலுத்தாததல் இவரது வீட்டை நேற்று முன்தினம் ஜப்தி செய்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சங்கரன், பத்ரகாளி ஆகியோர் பூச்சி மருந்தைக் குடித்துவிட்டனர். பின்னர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சங்கரன் உயிரிழந்தார். பத்ரகாளிக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சங்கரன் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரது உறவினர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் தூத்துக்குடி- நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். மேலும், சங்கரன் உடலை வாங்க மறுத்து விட்டனர். வல்லநாட்டில் உள்ள 150-க்கும் மேற்பட்ட கடைகளை வியாபாரிகள் அடைத்தனர்.
நேற்று மாலை ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ரத்னசங்கர், டிஎஸ்பி ராமகிருஷ்ணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சங்கரனின் 2 குழந்தைகளுக்கும் தலா ரூ.4 லட்சம், அவரது மனைவி பத்ரகாளி சிகிச்சைக்கு ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.10 லட்சம் தனியார் நிதி நிறுவனம் மூலம் வழங்கப்படும். ஜப்தி நடவடிக்கையை ரத்து செய்து, வீடு உடனடியாக வழங்கப்படும். பத்ரகாளிக்கு அரசு வேலைக்குப் பரிந்துரை செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். வீட்டின் சாவி சங்கரனின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
27 மணி நேரம் தவித்த நாய்கள்: சங்கரன் வீட்டை ஜப்தி செய்தபோது வீட்டுக்குள் 10 நாய்கள் இருந்துள்ளன. அவற்றை வெளியேற்றாமல் வீட்டுக்கு ‘சீல்’ வைத்துள்ளனர். இதனால் உணவு, குடிநீர் கிடைக்காமல் நாய்கள் தவித்துக் கொண்டிருந்தன. இந்நிலையில் நேற்று மாலை வீடு திறக்கப்பட்டது. சுமார் 27 மணி நேரத்துக்குப் பின்னர் வீட்டிலிருந்து வெளியே வந்த நாய்களுக்கு அப்பகுதி மக்கள் உணவு அளித்தனர்.