

பொது இடங்களில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் வைக்கக் கூடாது என்ற தீர்ப்பை உயர் நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கை: சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை கடந்த மாதம் 27-ம் தேதியன்று அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் குறித்து வழங்கியுள்ள தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமையையும், ஜனநாயகத்தையும் மறுப்பதாகும். நீதித்துறையின் அத்துமீறலும் ஆகும்.
அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களோ, விளம்பர பலகைகளோ பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் பட்சத்தில் அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கு நிர்வாக ரீதியான பல்வேறு கட்டுப்பாடுகள் தற்போது அமலில்இருக்கின்றன. அவை முறையாக அமல்படுத்துவதற்கும், தேவையான கட்டுப்பாடுகளை விதிக்கவும் ஆணை பிறப்பிப்பிக்கலாம்.
ஆனால், ஒட்டுமொத்தமாக பொது இடங்களில் எங்குமே கொடிக்கம்பங்கள் வைக்கக் கூடாது என்பது அரசமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். ஒரு தனியார் இடத்தில் கொடிக்கம்பத்துக்கு மட்டும் நிர்வாக அனுமதி பெற வேண்டுமென்பது ஜனநாயகம் குறித்த சகிப்புத் தன்மையற்ற சிந்தனையாகும்.
எனவே, உயர் நீதிமன்றம்வழங்கிய கொடிக்கம்பங்களைஅகற்றும் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழக அரசு இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு கூறியுள்ளார்.