

சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் தபால்தலை கண்காட்சியில், தனித்துவமான சுவை கொண்ட ஆத்தூர், சோழவந்தான் வெற்றிலைகளின் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு வட்ட அஞ்சல் துறை சார்பில் 14-வது மாநில அளவிலான தபால்தலை கண்காட்சி சென்னை ஷெனாய் நகரில் நேற்று முன்தினம் (ஜன.29) தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதையொட்டி தமிழ் மண்ணின் அழகையும், இயற்கை வளங்களையும் பெருமைப்படுத்தும் வகையிலான சிறப்பு அஞ்சல் உறைகள் வெளியிடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் மரியம்மா தாமஸ் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் செந்தில்குமார் முன்னிலையில், `தமிழகத்தின் இயற்கை அதிசயங்கள்' மற்றும் `வெள்ளோடு பறவைகள் சரணாலயம்' பற்றிய சிறப்பு அஞ்சல் உறைகள், `ஆர்க்கிட் மற்றும் அயல்நாட்டு பறவைகள்' குறித்த சிறு புத்தகத் தொகுப்பு ஆகியவற்றை முதன்மை அஞ்சல் துறை தலைவர் மரியம்மா தாமஸ் வெளியிட்டார். தமிழக வனப்படையின் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ஸ்ரீனிவாஸ் ஆர்.ரெட்டி பெற்றுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் விளையும் தனித்துவமான சுவை கொண்ட ‘ஆத்தூர் வெற்றிலை’யின் சிறப்பு அஞ்சல் உறையை மரியம்மா தாமஸ் வெளியிட, தூத்துக்குடி தமிழ்நாடு மின்சார நிறுவனமான என்எல்சியின் முதன்மைச் செயலர் கே.அனந்தராமானுஜம், ஆத்தூர் வட்டார வெற்றிலை விவசாயிகள் சங்க உறுப்பினர் விஜயகோபி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
மதுரை `சோழவந்தான் வெற்றிலை'யின் சிறப்பு அஞ்சல் உறையை, மதுரை வட்ட அஞ்சல் துறை மூத்த கண்காணிப்பாளர் வடக் ரவிராஜ் ஹரிச்சந்திரா, வெள்ளாலர் உறவின்முறை சங்கத்தின் தலைவர் எஸ்.சுகுமார், வெற்றிலைக் கொடிகள் விவசாய சங்க நிர்வாகி எஸ்.திரவியம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இத்துடன் தமிழகத்தின் மாநிலப் பறவை மரகதப்புறா மற்றும் பறவைகளின் நிலப்பரப்பு குறித்த பட அஞ்சல் அட்டையும் வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில் செயலர் செந்தில்குமார் பேசுகையில், ``தமிழகத்தின் இயற்கை அதிசயங்களைப் பிரபலப்படுத்த அஞ்சல் துறை மேற்கொண்டு வரும் முயற்சிகள் மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு இயற்கை அதிசயங்கள், வனவிலங்குகள், பறவைகள், தாவரங்கள் போன்றவை குறித்து பொதுமக்களிடமும், மாணவர்களிடமும் எடுத்துச்செல்வது, அவற்றைப் பற்றி தெரிந்துகொள்ளவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் வழிவகுக்கும்” என்று தெரிவித்தார். இந்நிகழ்வில் சென்னை நகர மண்டல அஞ்சல் துறை இயக்குநர் மேஜர் மனோஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.