

கோவை: கோவையில் செயல்பட்டு வந்த தனியார் ஐடி நிறுவனம் முன்னறிவிப்பு இல்லாமல் மூடப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட 3,000 தொழிலாளர்கள் போராட்டத்தை தொடர்ந்து நிலுவை ஊதியம் மற்றும் பணிக்கொடை ஆகியவற்றை ஜனவரி 31-ம் தேதிக்குள் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
‘போக்கஸ் எஜூமேட்டிக் பிரைவேட்’ என்ற தொழில்நுட்ப நிறுவனம், கடந்த 2017-ம் ஆண்டு முதல், கோவை ஆர்.எஸ்.புரம் - தடாகம் சாலையில் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பணியாற்றி வந்தனர். இப்பணியாளர்கள், அமெரிக்காவில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இணைய வாயிலாக பாடம் கற்பித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென நிறுவனம் மூடப்பட்டதாகவும், இதனால் அனைவரும் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக இ-மெயில் வந்தது. இதையடுத்து நிறுவன ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தொழிலாளர்கள் அலுவலகத்தில் புகார் செய்தனர். பின்னர், தொழிலாளர்கள் போராட்டத்தை தொடர்ந்து அந்நிறுவனம் வரும் ஜனவரி மாதம் 31-ம் தேதிக்குள் நிலுவை ஊதியம் மற்றும் பணிக்கொடை ஆகியவற்றை வழங்குவதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கூறும்போது, இப்பிரச்சினை தொடர்பாக தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். கோவை முன்னாள் எம்.பி பி.ஆர்.நடராஜன் கூறும்போது, எந்த நாட்டு நிறுவனமாக இருந்தாலும் நம் நாட்டு சட்ட விதிகளின்படி தான் செயல்பட வேண்டும். முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென 3,000 தொழிலாளர்களை பணியில் இருந்து ஒரு இ-மெயில் மூலம் நீக்குவது என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார்.