“மத்திய பட்ஜெட்... வரி விதிப்பில் தெளிவு இருக்காது!” - கார்த்தி சிதம்பரம் எம்.பி

கார்த்தி சிதம்பரம் | கோப்புப் படம்
கார்த்தி சிதம்பரம் | கோப்புப் படம்
Updated on
1 min read

காரைக்குடி: ‘பாஜகவினருக்கு இந்திய பொருளாதாரத்தை வழி நடத்தும் திறன் இல்லை’ என சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்தார்.

காரைக்குடி பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகத்தில் தொலைத்தொடர்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. எம்.பி.க்கள் கார்த்தி சிதம்பரம், தர்மர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தொலைதொடர்பு ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் கார்த்தி சிதம்பரம் கூறியது: “நாடாளுமன்ற பட்ஜெட்டில் ஏமாற்றம்தான் இருக்கும். வரி விதிப்பில் தெளிவு இருக்காது. பாஜகவினருக்கு இந்தியப் பொருளாதாரத்தை வழி நடத்தும் திறன் இல்லை.

வேங்கைவயல் பிரச்சினையில் திருமாவளவனிடம் ஏதேனும் தகவல் இருந்தால் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, வேறு அமைப்புகள் மூலம் விசாரணை கேட்கலாம். தமிழகத்தில் முதல்வராக வருவதற்கு சாதிப் பாகுபாடு கிடையாது. எந்தச் சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் கட்சிக்கு தலைவராகி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றால் முதல்வராகி விடலாம். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்துக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும்.

பி.எஸ்.என்.எல் நிறுவனம் வீழ்ச்சிக்கு பல காரணம் உள்ளன. அதில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தாததே முக்கிய காரணம். பணிபுரியும் ஊழியர் மிகவும் திறமையானவர்கள். அரசு பின்புலமாக இருந்தால்தான் வளர்ச்சி அடையும். சீமான் மக்களுக்கான ஆக்கபூர்வமான விஷயங்களை பேசுவதில்லை. சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசுவதை நான் கவனிப்பது இல்லை. வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேசி தான் முடிவு செய்யப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in