

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடக்கவுள்ளது. இதில், திமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 46 பேர் போட்டியிடுகின்றனர். கடந்த 20-ம் தேதி வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொருத்துவதற்காக, வேட்பாளர்கள் பெயர், சின்னம் ஆகியவை அச்சிடப்பட்ட ‘பேலட் ஷீட்’களை அச்சிடும் பணி சென்னையில் நடந்தது.
இப்பணி நிறைவடைந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களில், வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இன்று (ஜன.29) காலை தொடங்கியது. இப்பணியைப் பார்வையிட வேட்பாளர்கள், முகவர்கள் சோதனைக்குப் பின் அனுமதிக்கப்பட்டனர். ஈரோடு மாநகராட்சி பாதுகாப்பு அறையில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த் முன்னிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் திறக்கப்பட்டு மாநகராட்சி கூட்டரங்குக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களில், வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்திய ‘பேலட் ஷீட்’ பொருத்தும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டனர். ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயர்கள் மட்டுமே பொருத்த முடியும் என்ற நிலையில், 46 வேட்பாளர்கள் மற்றும் நோட்டா என மொத்தம் 47 பேர் களத்தில் உள்ளதால், ஒரு வாக்குச்சாவடிக்கு 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
அதன்படி, இந்த்த் தேர்தலில் 237 வாக்குச் சாவடிகளிலும், 20 சதவீதம் கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்களையும் சேர்த்து மொத்தம் 852 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 284 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 308 விவி பேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இதில், 852 வாக்குப் பதிவு இயந்திரங்களிலும் வேட்பாளரின் பெயர், சின்னம் அச்சிடப்பட்டுள்ள ‘பேலட் ஷீட்’கள் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. இப்பணி மூன்று நாட்களுக்குள் நிறைவடையும் என தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.