

மதுரை: மதுரை திருப்பரங்குன்றத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் சுவர் ஓவியங்கள் வரையப்படுகிறது. எனவே, இந்தத் தொகுதியில் அண்ணாமலை போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
திருப்பரங்குன்றம் நாட்டின் முக்கிய ஆன்மிக தலமாக திகழ்கிறது. இங்குள்ள மலைமீது சுப்ரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இது அறுபடை வீடுகளில் முதல் வீடாகும். சமீப காலமாக இந்த மலை மீது அமைந்துள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு, சேவல் பலியிடப் போவதாக ஒரு சில முஸ்லிம் அமைப்புகள் அறிவித்து ஊர்வலம் சென்றதன் பேரில், மதரீதியான பதற்றம் உருவாகியுள்ளது. இதனால், பாஜகவினருக்கும், இந்து அமைப்பினருக்கும் இடையே உரசல் ஏற்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் நகர் பகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ஓவியம், ஆங்காங்கே பொதுச்சுவர்களில் வரையப்படுகிறது. பொதுவாக அரசியல் கட்சிகள் சுவர் விளம்பரம், தலைவர்கள் சுவர் ஓவியம் போன்றவை தேர்தல் நேரத்துக்கான விளம்பர உத்தியாகவும், மாநில மாநாடுகளுக்கு தொண்டர்களை அழைப்பதற்காகவும் வரையப்படும். ஆனால், தற்போது திருப்பரங்குன்றம் பகுதியில் பாஜகவின் மாநில மாநாடோ, அதற்கான முன்னோட்டமான எந்த நிகழ்ச்சிகளும் இல்லை.
திருப்பரங்குன்றம் மலையை வைத்து, பாஜகவுக்கும், முஸ்லிம் அமைப்புகளுக்கும் இடையே தினந்தோறும் ஏதாவது பிரச்சினைகள் மட்டுமே சென்று கொண்டிருக்கிறது. அதனால், மாநகர காவல் துறை சார்பில் திருப்பரங்குன்றம் அடிவாரத்தில் நிரந்தரமாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலைக்கு செல்வதற்கு காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்வதற்காக தனிப்பாதையும், சிக்கந்தர் பாதுஷா தர்காவுக்கும், காசிவஸ்வநாதன் கோயிலுக்கு செல்வதற்கு செல்வதற்கு மற்றொரு பாதையும் உள்ளன.
போலீஸார், இந்த இரு மலைப் பாதைகளுக்கு செல்லும் நுழைவு வாயில் பகுதிகளில் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டள்ளனர். தற்போது சர்ச்சைகளுக்கு பிறகு மலைப்பகுதிகளுக்கு யார் யார் செல்கிறார்கள் என்ற விவரங்கள் சேகரிக்கப்படுவதோடு, அவர்கள் விவரம் கேட்கப்பட்டு முழுபரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். அமைப்பு, கட்சி ரீதியாக யார் சென்றாலும் அவர்கள் தடுக்கப்பட்டு மாநகர காவல் ஆணையர் அனுமதி இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
மேலே மலைக்கு செல்லக்கூடியவர்கள் எடுத்து செல்லக்கூடிய உணவு பொட்டலங்களையும், உடமைகளையும் போலீஸார் பரிசோதிக்கிறார்கள். இந்த பரபரப்பான சூழலில் திருப்பரங்குன்றம் பகுதியில் பாஜகவினர், அண்ணாமலை சுவர் ஓவியங்களை வரைவது, அரசியல் கட்சியினர் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. அவர், ஆன்மிக ஸ்தலமாக கருதப்படும் திருப்பரங்குன்றத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் திருப்பரங்குன்றத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து உள்ளூர் பாஜகவினரிடம் கேட்டபோது, “சட்டமன்ற தேர்தலில் யார் எங்கு போட்டியிடுவது என்பதை கட்சித் தலைமைதான் தீர்மானிக்கும். தற்போது அதுபோன்ற பேச்சுவார்த்தைகளும் முடிவுகளும் எடுக்கப்படவில்லை. சட்டமன்ற தேர்தலுக்கு வலுவான கூட்டணியை கட்டமைக்கும் பணியில் அண்ணாமலை ஈடுபட்டுள்ளனர். புதிய நிர்வாகிகளை நியமித்து அவர்களை சட்டமன்ற தேர்தலுக்கு முன் தயார் செய்து தேர்தல் களப்பணியில் ஈடுபடுத்துவதற்கான ஆயத்த வேலைகளையும் செய்து வருகிறார். தற்போது வரும் எந்த தகவலும் உறுதி செய்யப்படாத தகவல்களே” என்று அவர்கள் கூறினர்.