டங்ஸ்டன் சம்பவம் எதிரொலி: மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரி தீர்மானம்
மதுரை: மதுரை, தேனி, சிவகங்கை மாவட்டங்களை ஒருங்கிணைத்து பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அரசு அறிவிக்க வேண்டும் என, மேலூர் அருகிலுள்ள கம்பூர் ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரை மாவட்டம், மேலூர் கொட்டாம்பட்டி அருகிலுள்ள கம்பூர் ஊராட்சியில் இன்று சிறப்பு கிராம சபை கூட்டம் தனி அலுவலர் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள் விவரம்: முல்லைப் பெரியாறு பாசனப் பகுதிகளான மதுரை, தேனி, சிவகங்கை மாவட்டங்களை ஒருங்கிணைத்து பாதுகாப்பட்ட வேளாண் மண்டலமாக மாநில அரசு அறிவிக்கவேண்டும்.
மேலூர் டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற கிராம பொதுமக்கள், பெண்கள், உழவர்கள், வணிகர்கள், தொழிலாளர்கள், வழக்கறிஞர்கள், தொல்லியல் அறிஞர்கள், சூழலியல் செயல்பாட்டாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், ஜனநாயக இயக்கங்கள், அரசியல் கட்சிகள், துணை நின்ற மத்திய, மாநில அரசுகள் அனைவருக்கும் நன்றி.
புலிமலை, சோமகிரி மலை, முறிமலை, அருவிமலை, முள்ளாமலை, கோட்டைமலை, பனைமலை, மேன்மலை உள்ளிட்ட வரலாறு மற்றும் பல்லுயிர் முக்கியத்துவம் வாய்ந்த மேலூர் பகுதி மலைக்குன்றுகளை பல்லுயிரிய மரபு தளமாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும்.
அகழாய்வு அடிப்படையிலும், பரவலாக கிடைக்கும் பெருங்கற்கால சின்னங்கள், வாழ்வியல் மேடுகள், தமிழிக் கல்வெட்டு சான்றுகளின் அடிப்படையிலும் தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மதுரை மாவட்டத்தை உலக பாரம்பரிய மண்டலமாக அறிவிக்க தேவையான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
