

புதுச்சேரி: புதுச்சேரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர், காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கம் வழங்கி கவுரவித்தார். அணிவகுப்புகளில் பெண்கள் பிரிவுகளுக்கு அதிக பரிசுகள் கிடைத்தன.
76வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புதுச்சேரி அரசு சார்பில் கடற்கரை சாலை காந்தி திடலில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இதற்காக காந்தி திடலுக்கு வந்த துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதனை, தலைமை செயலர்(பொறுப்பு) ஆஷிஷ் மாதவராவ் மோரே, டிஜிபி ஷாலினி சிங் ஆகியோர் வரவேற்று, விழா மேடைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், தேசியக்கொடியை ஏற்றி வைத்து ஆளுநர் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பிறகு, ஆளுநர் விழா மேடையில் இருந்து நடந்து சென்று போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
மீண்டும் மேடைக்கு திரும்பிய ஆளுநர், காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கமும், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 26 பள்ளிகளுக்கு சுழற்கேடயமும் வழங்கினார். இதில் முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், எதிர்க்கட்சி தலைவர் சிவா, செல்வகணபதி எம்பி, என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். காங்கிரஸ் பங்கேற்கவில்லை. பின்னர் அணிவகுப்பு, கலைநிகழ்வுகள் நடந்தன.
சிறந்த அணிவகுப்புக்கான பரிசு: சிறந்த அணிவகுப்புகளுக்கு ஆளுநர் கைலாஷ் நாதன் சுழற்கோப்பை வழங்கினார். இதில் காவலர் பிரிவில் கமாண்டோ பெண்கள் படைப்பிரிவுக்கும், காவலர் அல்லாத பிரிவில் ஊர்க்காவல் படை பெண்கள் பிரிவுக்கும், தேசிய மாணவர் படை ஆண்கள் முதல்நிலை பிரிவில் கடற்படை பிரிவுக்கும், தேசிய மாணவர் படையின் முதல்நிலை பெண்கள் பிரிவில் தரைப்படை பிரிவுக்கும், தேசிய மாணவர் படை இளநிலை பிரிவில் தரைப்படை கடற்படை, விமானப்படை இளநிலை பெண்கள் பிரிவு கூட்டு அணிவகுப்புக்கும் பரிசு வழங்கப்பட்டது.
இதேபோல், கல்வித்துறை செயலரின் சுழற்கோப்பை சமுதாய நலப்பணி திட்ட ஆண்கள் பிரிவுக்கும், அரசு பள்ளி ஆண்கள் பிரிவில் இந்திரா நகர் இந்திரா காந்தி அரசு மேல்நிலைப்பள்ளிக்கும், அரசு பள்ளி பெண்கள் பிரிவில் திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் வழங்கப்பட்டது.
மேலும், அலங்கார வண்டிகள் அணி வகுப்பில் ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியின நலத்துறை வாகனம் முதல் பரிசை வென்றது. இரண்டாவது பரிசை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை வென்றது. அரசு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சியில் முதல் முறையாக பங்கேற்ற புதுச்சேரி மண்டலம்-1 ஆரம்பப் பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிக்கு பரிசு வழங்கப்பட்டது. சிறப்பு பரிசு ஜவகர் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.