சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு சுரக்‌ஷா புரஸ்கார் வெண்கல விருது

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு சுரக்‌ஷா புரஸ்கார் வெண்கல விருது
Updated on
1 min read

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெறும் கட்டுமான தளங்களில் சிறந்த பாதுகாப்பு செயல்திறனை நிரூபித்ததற்காக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு 2024-ம் ஆண்டுக்கான சுரக்‌ஷா புரஸ்கார் வெண்கல விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் தொழிலாளர் அமைச்சகத்தின், தேசிய பாதுகாப்பு கவுன்சில் இந்தியா (NSCI) சார்பில், 2024-ம் ஆண்டுக்கான பாதுகாப்பு விருதுகளில் மதிப்புமிக்க சுரக்‌ஷா புரஸ்கார் வெண்கல விருது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த மதிப்பு மிக்க அங்கீகாரம், 2-வது கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெறும் கட்டுமான தளங்களில் சிறந்த பாதுகாப்பு செயல் திறனுக்காக வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. 128 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

கட்டுமான பணிக்கு.. இந்த விருது, கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து பாரதிதாசன் சாலை மெட்ரோ நிலையம் வரையிலான கட்டுமானப் பணியின் தொகுப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டப் பணி, ஐடிடி சிமென்டேஷன் இந்தியா நிறுவனத்தால் கட்டமைக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த விருதை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இதன் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக்கிடம் இணை பொது மேலாளர் (தர உறுதி/தரக்கட்டுப்பாடு) பி. கவுந்தின்ய போஸ் மற்றும் அலுவலர்கள் காண்பித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், ஐடிடி சிமென்டேஷன் இந்தியா நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in