ரவுடி பாம் சரவணனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க கோரி மனைவி வழக்கு

ரவுடி பாம் சரவணனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க கோரி மனைவி வழக்கு
Updated on
1 min read

சென்னை: இடது காலில் குண்டு துளைத்த ரவுடி பாம் சரவணனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கக் கோரி அவரது மனைவி தொடர்ந்த வழக்கில், மருத்துவ அறிக்கைகளை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பாம் சரவணனின் மனைவி மகாலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘கடந்த ஜன.14 அன்று எனது கணவரை சுட்டு பிடித்ததாகவும், எனது கணவரின் இடது காலில் இருந்த துப்பாக்கி குண்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அகற்றப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

இடது காலில் இருந்த குண்டு அகற்றப்பட்ட பி்ன்னரும் எனது கணவரின் காலில் ரத்தக்கசிவு உள்ளது. எனவே அதை சரிசெய்யும் வகையில் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்க அனுமதி கோரி கடந்த ஜன.18 அன்று சிறைத் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் பரிசீலிக்கப்படவில்லை. எனவே எனது மனுவை பரிசீலித்து அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும், எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி பாம் சரவணனுக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அதுதொடர்பான மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், அந்த மருத்துவ அறிக்கைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணையை வரும் ஜன.27-க்கு தள்ளி வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in