

காஞ்சிபுரத்தில் பட்டு நெசவுத் தொழிலை நம்பி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களின் நலன் கருதி கைத்தறி சங்கங்களை தோற்றுவித்தவர் சுதந்திர போராட்டத் தியாகி கே.எஸ்.பார்த்தசாரதி. இவர், கூட்டுறவு சங்கங்கள் மூலம் உருவாக்கப்படும் பட்டுச் சேலைகளுக்கான ஜரிகையை சூரத் பகுதியில் இருந்தே வாங்க வேண்டி இருப்பதால் அந்த ஜரிகையை தயாரிக்கும் தொழிற்சாலையை தமிழக அரசே நிறுவ வேண்டும் என்று அப்போது முதல்வராக இருந்த அண்ணாவிடம் கோரிக்கை வைத்தார். அண்ணா அதற்கான நடவடிக்கைகளை எடுத்தார்.
ஆனாலும் எம்ஜிஆர் ஆட்சிகாலத்தில் 1971-ம் ஆண்டுதான் இந்த ஜரிகை உற்பத்தி தொழிற்சாலை காஞ்சிபுரம் ஓரிக்கையில் தொடங்கப்பட்டது. தமிழக அரசால் தொடங்கப்பட்டு தற்போதுவரை நடத்தப்படும் ஒரே ஜரிகை உற்பத்தி நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஜரிகை உற்பத்தி தொழிற்சாலை முதலில் 3,000 ஆயிரம் மார்க் ஜரிகை உற்பத்தி செய்யும் அளவுக்குதான் தொடங்கப்பட்டது. பின்னர் ஜரிகைக்கான தேவை அதிகரித்ததை தொடர்ந்து 8 ஆயிரம் மார்க்காக உற்பத்தி அளவு உயர்த்தப்பட்டது. இங்கு ஒரு மார்க் என்பது 242 கிராம் ஜரிகை அளவை குறிக்கும். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு ரூ.1.5 கோடி லாபம் ஈட்டும் தொழிற்சாலையாக இந்த ஜரிகை தொழிற்சாலை வளர்ந்திருந்தது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த ஆலையின் ஜரிகை விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. கூட்டுறவு நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பட்டு ஆலைகளில் கண்டிப்பாக 60 சதவீதம் இந்த ஜரிகையை பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டும் இதன் உற்பத்தி தற்போது 3000 ஆயிரம் மார்க்காக குறைக்கப்பட்டுவிட்டது. இந்தத் தொழிற்சாலையில் பணிசெய்யும் தொழிலாளர்கள் எண்ணிக்கையும் தற்போது 150-ல் இருந்து 60-ஆக குறைந்துவிட்டது.
வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் சந்தை வாய்ப்புகளுக்கு ஏற்ப இந்த நிறுவனம் மேம்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருந்தாலும், கூட்டுறவு சங்கங்களின் பட்டுச் சேலை விற்பனையில் ஏற்பட்ட சரிவு இந்த ஜரிகை தொழிற்சாலையையும் பாதித்திருப்பதாக பல்வேறு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கே.எஸ்.பார்த்தசாரதி நெசவாளர் சங்கத்தின் தலைவர் ஜெ.கமலநாதனிடம் கேட்டபோது அவர் கூறியது: ஓரிக்கை ஜரிகை தொழிற்சாலையின் ஜரிகை உற்பத்தி குறைந்ததற்கு தொழில்நுட்பக் குறைபாடுகளைத் தாண்டி ஜரிகைக்கான தேவை குறைந்தது ஒரு முக்கிய காரணம்.
பட்டு கூட்டுறவு சங்கங்கள் கண்டிப்பாக இந்த ஜரிகை ஆலையின் ஜரிகையை 60 சதவீதம் பயன்படுத்த வேண்டும் என்ற அரசு உத்தரவு இருப்பதால்தான் இந்த அளவுக்கு கூட உற்பத்தி நடைபெறுகிறது. இந்த நிறுவனம் தயாரிக்கும் ஒரிஜினல் ஜரிகையில் 0.5 சதவீதம் தங்கமும், 40 சதவீதம் வெள்ளியும், 35.5 சதவீதம் காப்பரும், 24 சதவீதம் பட்டு இழையும் இருக்கும்.
இதன் விலை ஒரு மார்க் 26 ஆயிரத்தை தாண்டி விற்கிறது. தங்கம், வெள்ளி விலையேற்றம் காரணமாக இதன் விலை அதிகரித்துள்ளது. சூரத்தில் இருந்து கிடைக்கும் ஜரிகை இந்த நிறுவனத்தின் ஜரிகையைவிட சுமார் ரூ.600 மட்டுமே குறைவாக கிடைக்கிறது. ஆனால் தனியார் யாரும் இந்த நிறுவனத்தின் ஜரிகைகளை வாங்குவதில்லை. காஞ்சிபுரம் பட்டு என்ற பெயரில் குறைந்த விலை ஜரிகைகளை வாங்கி சேலைகளையும் குறைந்த விலைக்கு விற்கின்றனர்.
அவர்கள் விற்கும் சேலைகளில் பயன்படுத்தும் ஜரிகையில் இந்த அளவுக்கு தங்கம், வெள்ளி இருக்காது. திருமணத்துக்கு 10 சேலை எடுப்பவர்கள் கூட முகூர்த்த சேலையை மட்டுமே கூட்டுறவு சங்கங்களில் எடுக்கின்றனர். விலை குறைவாக இருப்பதால் மற்ற சேலைகளை தனியார் கடைகளில் எடுக்கின்றனர். தங்கம், வெள்ளி விலையேற்றத்தால் ஜரிகை விலை ஏறியது, இதனால் பட்டுச் சேலை விலை ஏறியதும் விற்பனை சரிவுக்கு முக்கிய காரணம்.
பட்டுச் சேலை விற்பனை சரிந்ததால் ஓரிக்கை ஜரிகை தொழிற்சாலையிலும் உற்பத்தி சரிந்துவிட்டது. தற்போது பட்டு நூலுக்கு 15 சதவீதம் அரசு மானியம் வழங்குகிறது. அதேபோல் அரசு நிறுவனமான ஓரிக்கை ஜரிகை நிறுவனத்தில் கொள்முதல் செய்யப்படும் ஜரிகைக்கும் அரசு மானியம் வழங்கினால் ஜரிகை உற்பத்தி தொழிற்சாலையை மீட்க முடியும் என்றார்.
இதுகுறித்து கைத்தறி துணை இயக்குநர் அலுவலகத்தில் சிலரிடம் கேட்டபோது, ஓரிக்கை ஜரிகை தொழிற்சாலையிடம் இருந்து சேலை உற்பத்திக்கு தகுந்தாற்போல் எவ்வளவு தேவையோ அந்த அளவுக்குதான் ஜரிகை வாங்கி இருப்பு வைக்க முடியும். விற்பனை குறைந்ததால் உற்பத்தியும் குறைந்துவிட்டது.
ஓரளவுக்கு மேல் மத்திய கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று ஜரிகை வாங்கி வைக்க முடியாது. தேங்கிக் கிடக்கும் சேலைக்கு மானியம், ஜரிகைக்கு மானியம் ஆகியவை வழங்கினால்தான் சேலை உற்பத்தியை அதிகரிக்க முடியும். அப்போதுதான் கூடுதல் ஜரிகையை கூட்டுறவு நிறுவனங்கள் வாங்க முடியும் என்றனர்.