திருப்பரங்குன்றம் தர்கா விவகாரத்தில் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு: நவாஸ்கனி எம்.பி

திருப்பரங்குன்றம் தர்கா விவகாரத்தில் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு: நவாஸ்கனி எம்.பி
Updated on
1 min read

மதுரை: திருப்பரங்குன்றம் மலை தர்கா விவகாரம் குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி நம்பிக்கை தெரிவித்தார்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் மலைமேல் உள்ள தர்காவில் ஆடு, கோழிகளை பலியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டதால் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், திருப்பரங்குன்றம் சென்ற வக்பு வாரிய தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவருமான ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி தர்காவுக்கு சென்று ஆய்வு செய்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தர்கா பகுதி சிக்கந்தர் மலை என காலம் காலமாக அழைக்கப்படுகிறது. மலைக்குப் பின்புறம் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. தர்காவுக்கு இஸ்லாமியர் அல்லாதவர்களும் சென்று வழிப்படுகின்றனர்.

நேர்த்திக்கடனை செலுத்த ஆடு, கோழிகள் அறுத்து சமைத்து மற்றவர்களுக்கும் உணவு வழங்குவது ஆண்டாண்டு காலமாக பழக்கத்தில் உள்ளது. அங்கே செல்பவர்கள் உணவுப் பொருட்கள், ஆடுகளை பலியிட தற்காலிகமாக தடை விதிப்பதாக சொல்லி இருக்கின்றனர். இது தொடர்பாக மதுரை ஆட்சியர், காவல்துறை ஆணையரிடம் பேசியிருக்கிறோம். தமிழக முதல்வரின் கவனத்துக்கும் கொண்டு சென்று தீர்வு காணப்படும்.

இங்குள்ள தர்காவும், பள்ளியும் தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு உட்பட்டது. அந்த வகையில் இங்கு இருக்கக்கூடிய கட்டுப்பாடுகளை தளர்த்த முயற்சி எடுப்போம். அனைவரும் ஒற்றுமையாக வழிபட ஏற்பாடு செய்வோம்” என்று அவர் கூறினார். கட்சியின் மாநில துணைத் தலைவர் அவுதா காதர், இளைஞர் அணி அமைப்பாளர்கள் ஹபீப் முகமது, ஷேக் முகமது உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in