

மதுரை: திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தர்காவில் ஆடு பலியிட முயன்றதாக இஸ்லாமிய அமைப்பினர் 200 மீதும், அனுமதியின்றி ஊர்வலம் நடத்திய இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 200 பேர் மீதும் திருப்பரங்குன்றம் போலீஸார் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா உள்ளது. ஆண்டுதோறும் இத்தர்காவில் சந்தனக்கூடு விழா நடத்தப்படுகிறது. இத்திருவிழாவையொட்டி நேற்று ஆடு,கோழிகளை பலி கொடுத்து கந்தூரி விழா நடத்த ஐக்கிய ஜமாத் உள்ளிட்ட சில இஸ்லாமிய அமைப்புகள் முயன்றனர்.இதற்கு இந்து முன்னணி உள்ளிட்ட சில இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று ஐக்கிய ஜமாத் தலைவர் காதர் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்பினர் ஆடு, கோழிகளுடன் மலை உச்சி செல்ல போவதாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்து துணை ஆணையர்கள் இனிகோ திவ்யன், அனிதா தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். ஆனாலும், தடையை மீறி இஸ்லாமியர்கள் திட்டமிட்டபடி மலையின்மேல் கந்தூரி கொடுக்க ஆடு, கோழிகளுடன் புறப்பட தயாராகினர். அவர்களை போலீஸார் தடுத்தபோது, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. அவர்களிடம் டிஆர்ஓ சக்திவேல் உள்ளிட்ட காவல்துறையினர் பேச்சு நடத்தினர். தர்காவில் வழிபட எவ்வித தடையும் இல்லை என்றும் ஆடு பலியிடும் பிரச்னையில் நீதிமன்றம் மூலம் தீர்வு காணுமாறும் அறிவுறுத்தினர். இதற்குபின், ஒரு வழியாக அவர்கள் கலைந்து சென்றனர்.
இதற்கிடையில் திருப்பரங்குன்றம் மலைமேல் இஸ்லாமியர்கள் ஆடு பலி கொடுக்கும் முயற்சியை கண்டித்தும், மலையின் மேல் ஆடு பலி கொடுக்க ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தியும் திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி அமைப்பு மாநில தலைவர் கடேஸ்வரா சுப்பிரமணியன் தலைமையில் இந்து முன்னணி அபை்பினர் வேல் ஏந்தி ஊர்வலம் நடத்தினர். இவ்விரு சம்பவமும் திருப்பரங்குன்றம் பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீஸார் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன்படி, அரசு பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஐக்கிய ஜமாத் தலைவர் காதர் உள்ளிட்ட 200 பேர் மீதும், அனுமதியின்றி ஊர்வலம், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் போன்ற 3 பிரிவுகளில் இந்து முன்னணி மாநில தலைவர் கடேஸ்வரா சுப்பிரமணியன் உட்பட 200 பேர் மீதும் வழக்கு பதிவு செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து திருப்பரங்குன்றம் பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.