ஈரோடு கிழக்கில் சுயேச்சைகளின் அலப்பறை: ரூபாய் நோட்டு மாலை அணிந்து வந்த வேட்பாளரால் பரபரப்பு 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய ரூபாய் நோட்டு மாலை அணிந்து வந்த சுயேச்சை வேட்பாளர் அக்னி ஆழ்வார்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய ரூபாய் நோட்டு மாலை அணிந்து வந்த சுயேச்சை வேட்பாளர் அக்னி ஆழ்வார்
Updated on
1 min read

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் அக்னி ஆழ்வார், ரூபாய் நோட்டு மாலை அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் களத்தில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களுக்கு இணையாக, ஊடகங்களின் கவனத்தை கவர பல்வேறு உத்திகளை சுயேட்சை வேட்பாளர்கள் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில் ஈரோடு கிழக்கு தொகுதியிலும், சுயேச்சை வேட்பாளர்கள் சிலர், ஊடகங்களைக் கவர விதவிதமான வேடங்களில் வரத் தொடங்கியுள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 10-ம் தேதியன்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்த கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்த நூர்முகமது, இறுதி ஊர்வலத்தின்போது பயன்படுத்தும் சட்டி மற்றும் மணி, பால் பாக்கெட் ஆகியவற்றுடன் வந்து மனு தாக்கல் செய்தார். 46-வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்யும் இவர், மக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டி இந்த வேடத்தில் வந்ததாகத் தெரிவித்தார்.

இதேபோல், தேர்தல் மன்னன் என்ற பட்டப்பெயர் கொண்ட சேலம் மேட்டூரைச் சேர்ந்த பத்மராஜனும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவர் 247-வது முறையாக தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்தார். மதுரையைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மதுர விநாயகம், ராணுவ உடையில் வந்து வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

இதன் தொடர்ச்சியாக, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்கு இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளரும், அகில இந்திய ஊழல் தடுப்பு கூட்டமைப்பு தலைவருமான அக்னி ஆழ்வார், ரூபாய் நோட்டுகளால் மாலை அணிந்து வந்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதோடு, இவர் தனது கட்டுத்தொகைக்காக நாணயங்களை எடுத்து வந்து அதிகாரிகளிடம் சமர்பித்தார். இவற்றை எண்ணி சரிபர்க்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டனர். இவர் ஏற்கெனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் ரூபாய் நோட்டு மாலை அணிந்து வந்து தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in