மதுரை - அருப்புக்கோட்டை - தூத்துக்குடி ரயில் வழித்தட திட்டம் தாமதமா?

மதுரை - அருப்புக்கோட்டை - தூத்துக்குடி ரயில் வழித்தட திட்டம் தாமதமா?
Updated on
2 min read

மதுரை - அருப்புக்கோட்டை - தூத்துக்குடி புதிய ரயில் வழித்தடம் அமைக்கும் திட்டம் தொடங்கப் பட்டு 8 ஆண்டுகளை கடந்த நிலையில் மத்திய, மாநில அரசுகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு விருதுநகர், வாஞ்சி மணியாச்சி வழியாக ரயில் வழித்தடம் உள்ளது. இந்த வழித்தடத்தில் கேரளா செல்லும் ரயில்கள் உட்பட அதிக ரயில்கள் இயக்கப்படுவதாலும், கிராசிங்குகளாலும் பயண நேரம் அதிகமாகிறது. கூடுதல் ரயில்களை இயக்க முடியாத சுழல் உள்ளது.

இதையடுத்து சரக்கு போக்குவரத்தை பிரதானமாகக் கொண்டு மதுரை, தூத்துக்குடி விமான நிலையங்கள், தூத்துக்குடி துறைமுகம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக தூத்துக்குடிக்கு புதிய ரயில் வழித்தடம் உருவாக்கப்படும் என வாஜ்பாய் தலைமையிலான மத்திய பாஜக ஆட்சியில் 1999 - 2000 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டு திருப்பரங்குன்றம், காரியாபட்டி, கல்குறிச்சி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி, நாகலாபுரம், விளாத்திகுளம், குளத்தூர், மேல்மருதூர், வாலசமுத்திரம், சில்லாநத்தம், சாமிநத்தம், தட்டப்பாறை, மீளவிட்டான், தூத்துக்குடி என 143.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில் பாதை அமைக்க திட்டமிடப்
பட்டது. ஆனால், நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் 2014-ல் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு இத்திட்டத்துக்கான பணிகள் வேகமெடுத்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2016-ம் ஆண்டு ரயில் வழித்தடம் அமைக்கும் பணிக்கு ஒப்பந்தம் விடப்பட்டது. இதில் முதற்கட்டமாக தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் முதல் மேல்மருதூர் வரை 18 கி.மீ. தூரத்துக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டு 2022 மார்ச்சில் ஆய்வு நடத்தப்பட்டது. 120 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டது. மேல்மருதூர் - திருப்பரங்குன்றம் இடையே ரயில் பாதை அமைப்பதற்கு மதுரை மாவட்டத்தில் 90 ஹெக்டேர், விருதுநகர் மாவட்டத்தில் 321 ஹெக்டேர், தூத்துக்குடி மாவட்டத்தில் 363 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

திட்ட மதிப்பீடு: உயர்வு விருதுநகரில் 52 பணியாளர்களுடன் நிலம் கையகப்படுத்தும் பிரிவு அமைக்க அறிவிப்பு வெளியிட்டு ஓராண்டான நிலையில், அதற்கான நிதியை ரயில்வே துறை வழங்காததால் அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. நிலம் கையகப்படுத்தும் பணிக்கு நிர்வாக செலவுகளுக்கு உரிய நிதியை வழங்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் ரயில்வே துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. கடந்த பட்ஜெட்டில் மதுரை - தூத்துக்குடி ரயில் வழித்தட திட்டத்துக்கு ரு.100.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

25 ஆண்டுகளுக்கு முன்பு இத்திட்டம் அறிவிக்கப்பட்டபோது ரூ.600 கோடியாக இருந்த திட்ட மதிப்பு, 2016-ல் பணிகள் தொடங்கியபோது ரூ.2,000 ஆயிரம் கோடியாக உயர்ந்தது. இந்நிலையில் 2024 பட்ஜெட்டில் ரூ.100 கோடி நிதி ஒதுக்கி உள்ளது பணியில் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாது என பலரும் கருத்து தெரிவித்தனர்.

ரயில்வே அமைச்சர்: இந்நிலையில் கடந்த வாரம் சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் ஆய்வு செய்ய வந்த மத்திய ரயில்வே அமைச்சர், மதுரை - அருப்புக்கோட்டை - தூத்துக்குடி ரயில் வழித்தடத் திட்டம் தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் கைவிடப்படுவதாகக் கூறியதாக தகவல் பரவியது. இதையடுத்து திமுக அரசை கண்டித்து பாஜக, அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் திட்டம் கைவிடப்படவில்லை என ரயில்வே துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் கடந்த 10-ம் தேதி ஆய்வு செய்த மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ஒரே நேரத்தில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதால் அதிக சத்தமும் குழப்பமும் நிலவியது.

மதுரை - தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டம் குறித்து கேட்ட கேள்வி அதிக சத்தம் காரணமாக தூத்துக்குடி என்பது தனுஷ்கோடி என புரிந்து கொள்ளப்பட்டதால், நில ஆர்ஜிதம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினை காரணமாக ராமேசுவரம் - தனுஷ்கோடி ரயில் பாதை திட்டத்தை கைவிடக் கோரி தமிழக அரசிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்தார்.

ஒரே நேரத்தில் தனித்தனி திட்டங்கள் பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதால், தவறாக தகவல் பரிமாற்றம் ஆகிவிட்டது. மதுரை - தூத்துக்குடி ரயில் பாதை திட்டத்துக்கு தமிழக அரசிடமிருந்து எந்தவிதமான நில ஆர்ஜிதப் பிரச்சினையும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in