Published : 15 Jan 2025 08:24 AM
Last Updated : 15 Jan 2025 08:24 AM
மதுரை: உலகப் புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று (ஜன.15) காலை 7.40 மணி அளவில் கோலாகலமாக தொடங்கியது. இதில் 1,000-க்கும்மேற்பட்ட காளைகளும், 900-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை. இந்த ஆண்டு பொங்கலை ஒட்டி முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி தை முதல் நாளன்று மதுரை அவனியாபுரத்தில் நேற்று சிறப்பாக நடந்து முடிந்தது. | வாசிக்க > அனல் பறந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 19 காளைகளை அடக்கிய கார்த்திக்கு கார் பரிசு!
இந்நிலையில், இன்று (ஜன.15) காலை பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது. இந்தப் போட்டி பாலமேட்டில் அமைந்துள்ள வாடிவாசலில் நடைபெறுகிறது. பாலமேடு கிராம பொது மகாலிங்க மடத்துக் கமிட்டியும் மதுரை மாவட்ட நிர்வாகமும் இணைந்து இந்தப் போட்டியை நடத்துகின்றன. மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்புடன் போட்டி தொடங்கியது. அதன் பிறகு பல்வேறு கோயில்களின் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து போட்டியில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்க்கப்படுகின்றன. இந்தப் போட்டியை தமிழக பத்திரப் பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
பல்வேறு சுற்றுகளாக நடைபெறும் இந்தப் போட்டியில் ஒவ்வொரு சுற்றுக்கும் பல வண்ண உடையை அணிந்து மாடு பிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். காளைகள் மற்றும் மாடு பிடி வீரர்களுக்கு உரிய மருத்துவ சோதனை செய்த பிறகே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர். விதிமுறைகளை மீறுபவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுகின்றனர்.
இந்தப் போட்டியை காண உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது வெளியூர், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பார்வையாளர்களும் பாலமேடு வருகை தந்துள்ளனர். போட்டியில் சிறந்து விளங்கும் காளை மற்றும் மாடு பிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT