தமிழக மீனவர்கள், படகுகளை மீட்கக் கோரி ஜெய்சங்கருக்கு ராமநாதபுரம் எம்.பி கடிதம்

தமிழக மீனவர்கள், படகுகளை மீட்கக் கோரி ஜெய்சங்கருக்கு ராமநாதபுரம் எம்.பி கடிதம்
Updated on
1 min read

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் உடனடியாக மீட்க வேண்டும் என வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி கடிதம் எழுதி உள்ளார்.

அந்தக் கடிதத்தில், “இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். இதற்கான நிரந்தர தீர்வை காண வேண்டும் என்பது மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. ஆனால், நிரந்தர தீர்வு காணப்படாமல் மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் சிறைபிடிக்கப்படுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரத்தைச் சேர்ந்த இரண்டு படகுகளையும், 8 மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படி தொடர்ந்து கைது செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள் விஷயத்தில் நிரந்தர தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” எனக் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in