ஜம்மு காஷ்மீரின் சோனாமார்க் சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

ஜம்மு காஷ்மீரின் சோனாமார்க் சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
Updated on
1 min read

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் உள்ள சோனாமார்க் சுரங்கப் பாதையை ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா முன்னிலையில் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

ஜம்மு - காஷ்மீரின் கந்தேர்பால் மாவட்டத்தில் உள்ள காகங்கீர் மற்றும் சோனாமார்க்கை இணைக்கும் வகையில் 'இசட்' வடிவ சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள சோனாமார்க் (இசட்-மோர் -Z-Morh) சுரங்கப்பாதையை ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா முன்னிலையில் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

சோனாமார்க் சுரங்கப்பாதையின் பணிகள் மே 2015 ஆம் ஆண்டு தொடங்கியது. ஆனால் பொருளாதார சவால்கள் காரணமாக 2018 ஆம் ஆண்டு இந்த பணிகள் நிறுத்தப்பட்டதால் இந்த திட்டம் முடிவடைய தாமதம் ஏற்பட்டது. பின்னர், இந்தத் திட்டம், அக்டோபர் 2012 ஆம் ஆண்டு அப்போதைய தரைவழிப் போக்குவரத்து அமைச்சராக இருந்த சி.பி.ஜோஷியால் அடிக்கல் நாட்டப்பட்டது.

ஆரம்பத்தில் 2016-2017 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று திட்டமிடப்பட்ட சுரங்கப்பாதை இப்போது நிறைவடைந்துள்ளது. ரூ.2,700 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் இந்த சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்டது. 8,650 அடிக்கு மேல் உயரத்தில் அமைந்துள்ள சோனாமார்க் சுரங்கப்பாதை, நிலச்சரிவு மற்றும் பனிச்சரிவு அதிகம் உள்ள பகுதிகளைத் தவிர்த்து, பாதுகாப்பான மற்றும் வேகமான பயணத்தை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லடாக் பிராந்தியத்தில் நாட்டின் பாதுகாப்புத் தேவைகளைப் பொறுத்தவரை சோனாமார்க் சுரங்கப்பாதை மிகவும் முக்கியமானது.

6.5 கிலோமீட்டர் நீளமுள்ள சோனாமார்க் சுரங்கப்பாதையின் மூலம் இனி ஆண்டு முழுவதும், ஸ்ரீநகரிலிருந்து சோனாமார்க் பகுதியை பார்வையிட முடியும். இனி எல்லா காலங்களிலும் மக்கள் சுலபமாக பயணிக்கவும் சுற்றுலா பயணிகள் வருவதற்கும் உதவியாக இருக்கும். கடுமையான பருவநிலைகளை பொருட்படுத்தாமல் சுரங்கப் பாதை கட்டுமானத்துக்கு அயராது பணியாற்றிய தொழிலாளர்களை சந்தித்து, பிரதமர் மோடி பாராட்டினார். பிரதமர் மோடியுடன் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, டாக்டர். ஜிதேந்திர சிங், ஜம்மு-காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் பிற அதிகாரிகள் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in