

மதுரை: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை டங்ஸ்டன் எதிர்ப்பு பொங்கலாக தமிழர்கள் கொண்டாட வேண்டும் என டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக கூட்டமைப்பு சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை எதிர்த்து மதுரை மாவட்டம் மேலூர் பகுதி மக்கள் கடந்த 2 மாதமாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தத் திட்டத்தை ரத்து செய்யும் உறுதியான அறிவிப்பை மத்திய அரசு இதுவரை வெளியிடவில்லை. எனவே போராட்டம் நடத்தி வரும் மேலூர் பகுதி மக்களுக்கு துணை நிற்கும் வகையில் இந்த பொங்கல் பண்டிகையை உலகத் தமிழர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில்/ நகர வீதிகளில்/ கிராமங்களில்/ டங்ஸ்டன் எதிர்ப்பு பொங்கலாக கொண்டாட அழைப்பு விடுகின்றோம்.
பொங்கல் நாளில் வாசல்களில் கோலமிடும் போது மலைகளை, விவசாயத்தை, பல்லுயுர்களை, தமிழர்களின் வரலாறு, பண்பாடு, வழிபாடுகளை, தொன்மங்களை குறிக்கும் கோலங்களை வரைந்து வேண்டாம் டங்ஸ்டன், வேதாந்தாவே வெளியேறு, மேலூர் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் பல்லுயிர், தொல்லியல் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற வாசகங்களையும் எழுத வேண்டும்.
பொங்கல் பொங்கி வரும் போது, பொங்கலோ பொங்கல், டங்ஸ்டன் எதிர்ப்பு பொங்கல், வேண்டாம் டங்ஸ்டன் என குலவையிடலாம். ஜல்லிக்கட்டு காளைகள் உள்ளிட்ட மாடுகளுக்கு வண்ணமிடும் போது, வேண்டாம் டங்ஸ்டன், வேதாந்தாவே வெளியேறு 13 உயிர்களை சுட்டுக்கொன்ற வேதாந்தாவே வெளியேறு உள்ளிட்ட வாசகங்களை எழுதி வைக்கலாம்.
பொங்கல் வைக்கும்போது, இன்னபிற பொங்கல் தருணங்களிலோ டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்து காணொளிகளை பதிவு செய்யலாம். இவ்வான டங்ஸ்டன் எதிர்ப்பு பொங்கலை கொண்டாடும் போது அவற்றை மறக்காமல் சமூக ஊடகங்களிலும் பதிவு செய்யலாம். வீடுகளிலோ தெருக்களிலோ ஊர்களிலோ தனியாகவோ கூட்டமாகவோ இணைந்து பொங்கல் நிகழ்வை அனுசரிக்கலாம். எந்த வடிவிலும் டங்ஸ்டன் எதிர்ப்பினை பொங்கல் விழாக்களில் பதிவு செய்தாலும் மறக்காமல் கூட்டமைப்புக்கு அனுப்ப வேண்டும்’ என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.