

எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது, தோழமைக் கட்சிகளும் கூட விமர்சிக்கும் துறையாக தமிழக பள்ளிக்கல்வித்துறை மாறியுள்ளது. ஆனாலும் அதற்கெல்லாம் தனக்கே உரிய பாணியில் பதில் கொடுத்து வருகிறார் துறை அமைச்சர் அன்பில் மகேஸ். நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை, சீமானின் பெரியார் குறித்த விமர்சனம், விஜய்யின் அரசியல் வருகை உள்ளிட்ட அனைத்து விஷயங்கள் குறித்தும் ‘இந்து தமிழ் திசை’க்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து...
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்திருந்தாலும் இன்னமும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகளும் இருக்கத்தானே செய்கிறது?
மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள யுடிஐஎஸ்இ (UDISE) தரவுகளின்படி, தமிழக அரசு பள்ளிகளில், 97.1 சதவீதம் கழிப்பறை வசதிகளும், அரசு உதவிபெறும் பள்ளிகளில், 98.6 சதவீதம் கழிப்பறை வசதிகளும் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 'பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்' ரூ 7,500 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்னும் ஐந்து ஆண்டுகளில் பள்ளிகளின் கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.
வசதி குறைவான அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகள் தத்தெடுப்பது தொடர்பான தங்களது கருத்து விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறதே?
தனியார் பள்ளிகள் சங்கத்தினர் நடத்திய ஒரு நிகழ்ச்சியில், “500 அரசு பள்ளிகளுக்கு. எங்களால் முடிந்த வசதிகளை செய்து தருகிறோம்” என்று தெரிவித்தனர். ‘எதற்காக இதைச் செய்கிறீர்கள்?’ என கேட்டபோது. ‘நாங்களும் அரசுப் பள்ளியில் படித்து வந்தவர்கள்தான். எங்களை உயர்த்திய அரசுப் பள்ளிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக செய்கிறோம்’ என்றனர். அதற்கு நான் நன்றி தெரிவித்தேன். இதுதான் அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகள் தத்தெடுப்பதாக தவறான தகவலாக பரவிவிட்டது. அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம் என்ற எங்கள் கொள்கையை ஒருநாளும் விட்டுத் தரமாட்டோம். அரசுப் பள்ளி குழந்தைகள், எங்களது சொந்தப் பிள்ளைகள். அவர்களை யாருக்கும் தத்துக் கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.
மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான், பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.2,151 கோடி நிதியை விடுவிப்போம் என மத்திய அரசு சொல்வது உண்மையா?
தமிழக அரசுக்கு கொடுக்க வேண்டிய ரூ.2,151 கோடியை தருமாறு முதல்வர். நான் மற்றும் அதிகாரிகள் என மூன்று கட்டமாக வலியுறுத்தியும், மத்திய அரசு நிதியை விடுவிக்கவில்லை. மத்திய அரசின் வீண் பிடிவாதத்தால், 44 லட்சம் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. அதோடு, மொழி என்பது நமது மாநிலத்தைப் பொறுத்தவரை மிகவும் உணர்ச்சிக்குரிய ஒரு விஷயமாகும். எங்களது இருமொழிக் கொள்கையை விட்டுக் கொடுத்து மத்திய அரசிடம் இருந்து நிதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்று முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இருமொழிக் கொள்கையே போதும் எனச் சொல்லும் தமிழக அரசு, தனியார் பள்ளிகளில் மட்டும் மும்மொழிக் கொள்கையை அனுமதிப்பது ஏன்?
தனியார் பள்ளிகளை பொறுத்தவரை, எத்தனை மொழி வேண்டுமானாலும் அவர்கள் படித்துக் கொள்ளட்டும். மாநில அரசின் கொள்கை என்பது இருமொழிக் கொள்கைதான். உலகளாவிய மொழி என்ற அடிப்படையில், ஆங்கில மும், சுயசிந்தனை வளர்ச்சிக்கு தாய்மொழியும் கற்பதே போதுமானதாகும். அதேசமயம், தனியார் பள்ளிகளில் கட்டாய தமிழ் பாடம் கொண்டு வந்திருக்கிறோம். அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சிகளையும் நடத்தி வருகிறோம்.
பல்வேறு கட்டங்களில் மற்றிய அரசில் திமுக அங்கம் வகித் தும், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. அதேசமயம், இதில் கையெழுத்துப் போட்டால் தான் நிதி தருவேன் மத்திய அரசு மிரட்டல் விடுக் கிறது. இதுவரை எந்த அரசும் இப்படிச் சொன்னதில்லை. ஒத்திசைவுக்கான அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல், மத்திய அரசு பெரியண்ணன் மனப்போக்கில் செயல் படும்போதுதான், கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் என இன்னும் வேகமாக குரல் கொடுக்க வேண்டி வருகிறது.
ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை, பொங்கல் பரிசு கொடுக்க முடியவில்லை என அனைத்துக்கும் மத்திய அரசு மீது குற்றம்சாட்டினால் மக்கள் ஏற்பார்களா?
தமிழக மக்கள் உழைத்து வரியாகத் தரக்கூடிய பணத்தைத் தான் நாம் கேட்கிறோம். நாம் ஒரு ரூபாய் கொடுத்தால் 29 பைசா தான் நமக்கு திரும்ப வருகிறது. தூத்துக்குடியில் ஏற்பட்ட இயற்கை பேரிடருக்கு ரூ.37 ஆயிரம் கோடி நமக்கு தேவை. ஆனால், ரூ.200 கோடி அளவில் தான் மத்திய அரசு வழங்கியுள்ளது. இது போன்ற காரணங்களால், பெரிய நிதி நெருக்கடியை மாநில அரசு சந்திக்க வேண்டியுள்ளது.
நாட்டில் அதிக வருவாய் கொடுக்கும் இரண்டாவது மாநிலமாக தமிழகம் இருந்தும், உத்தரப்பிரதேசத் திற்குத்தான் அதிக நிதி ஒதுக்குகின்றனர். எங்களது உழைப்பைச் சுரண்டி மற்றவர்களுக்கு கொடுப்பதை ஏற்க முடியாது. இதனை மக்கள் உணர்ந்ததால்தான். பாஜக கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை.
நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறீர்கள். ஆனால், தமிழகத்தில் நீட் எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதே..?
நீட் தேர்வுக்கு எதிராக சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தமிழக அரசு தொடர்ந்து போராடி வருகிறது. இப்பிரச்சினையில் நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் என்று நம்புகிறேன். இந்த நிலையில், மருத்துவம் படிக்க வேண்டும் என்று விரும்பும் குழந்தைகளை ஊக்கப் படுத்த, நீட் மட்டுமல்லாது அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் அவர்களை தயார்படுத்தும் பணியையும் அரசு செய்து வருகிறது.
அண்ணா பல்கலை. மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்துப் பேசினால், பொள்ளாச்சி சம்பவத்தை ஞாபகப்படுத்துவது ஆரோக்கியமான அரசியலா?
இதுபோன்ற பாதிப்பு ஏற்படும் போது, இரு முதல்வர்களும் எப்படி கையாண்டார்கள் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். பொள்ளாச்சி சம்பவத்தை பொறுத்தவரை. இரண்டு ஆண்டுகள் தொடர்ந்த துயரமான சம்பவம் அது. அது தொடர்பாக புகார் கொடுக்கப்பட்டு. 12 நாட்கள் கழித்துத்தான் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. அதன் மீதான நடவடிக்கைகள் திட்ட மிட்டு தாமதப்படுத்தப்பட்டது.
ஆனால், அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில். 4 மணி நேரத்தில் குற்றவாளி யார் என கண்டறியப்பட்டு, 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார். அதோடு இந்த விவகாரத்தில் தொடர்புடையவர் எந்த கொம்பனாக இருந்தாலும், உச்சபட்ச நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்வர் உறுதி அளிக்கிறார்.
இரு முதல்வர்களும் எடுத்த நடவடிக்கையைத்தான் ஒப்பீடு செய்கிறோம். மிக முக்கியமாக, கல்லூரிகளுக்கு வரும் பெண் குழந்தைகளுக்கு பயம் ஏற்படக்கூடாது என்ற எண்ணம் மட்டுமே முதல்வரின் மனதில் உள்ளது; இதில் அரசியல் இல்லை.
திராவிடத்தை ஒழிப்பது தான் எனது கொள்கை என்று சொல்லும் சீமான்,பெரியார் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறாரே..?
தந்தை பெரியாரின் செல்லப்பிள்ளையாக வளர்ந்தவர் என் தாத்தா அன்பில் தர்மலிங்கம். அவருடைய பேரனாக நான் இதற்கு பதில் சொல்கிறேன். கல் ஒன்று எறிந்தால்... சிலை ஒன்று முளைக்கும். அதுபோல, எங்கெல்லாம் விமர்சனம் என்ற கல் அடிக்கப்பட்டதோ, அங்கெல்லாம், பெரியார் சிலைகள் முளைத்ததுதான் வரலாறு. இது போன்ற விமர்சனங்களால், இனி அதிகம் தொடரும் என்று நினைக்கிறேன்.
தமிழக அரசியலில் எம்ஜிஆர், விஜயகாந்த் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் வந்தபோதெல்லாம் திமுக-வுக்கு பின்னடைவு ஏற்பட்டது. தற்போது நடிகர் விஜய் வரவால் அத்தகைய பின்னடைவு ஏற்படுமா?
நடிகர் விஜய் இன்னும் முழுநேர அரசியல்வாதியாக வெளியில் வரவில்லை. யாரெல்லாம் வீட்டில் உட்கார்ந்து கொண்டு சமூக வலைதளத்தில் அரசியல் செய்கிறார்களோ அவர்கள் எல்லாம், களத்தில் இறங்கிப் பார்த்தால் தான், மக்களின் நிலை என்னவென்று தெரிய வரும். விஜய் முழுமையாக அரசியலுக்கு வரும்போது அவருடைய வீச்சு என்ன என்பது தெரியும்.
சினிமாவில் தோற்றவர் துணை முதல்வராகிவிட்டார், ஜெயித்தவர் அரசியலுக்கு வந்து விட்டார் என்று உதயநிதி - விஜய்யை ஒப்பிட்டு அண்ணாமலை கருத்துக் கூறியிருக்கிறாரே..?
சினிமாவைப் பொறுத்தவரை வணிக ரீதியான வெற்றி. கருத்தியல் ரீதியான வெற்றி என்று இரண்டு இருக்கிறது. உதயநிதி நடித்த படங்கள் கருத்தியல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றுள்ளன. எனவே இதில் வென்றவர், தோற்றவர் என்று பார்க்க வேண்டியதில்லை. அதோடு. இன்றைக்கு களத்தில் வென்ற ரியல் ஹீரோவாக துணை முதல்வர் உதயநிதி இருக்கிறார்.
வாரிசு அரசியல் சகஜமாகிவிட்ட நிலையில், உதயநிதியின் அரசியல் பிரவேசம் மட்டும் ‘மன்னராட்சி’ என்று விமர்சிக்கப்படுகிறதே..?
உதயநிதி நடித்த ‘மாமனிதன்’ படத்தில், “எல்லோரும் சமம் என்றால், யார் ராஜா?” என்று கேட்பது போல் ஒரு வசனம் வரும். அதற்கு, “எல்லோரும் சமம் என்று சொல்பவர் தான் ராஜா” என்று உதயநிதி பதிலளிப்பார். மன்னராட்சி என்று கேட்டதால் இந்த வசனம் ஞாபகம் வந்தது. திமுக மீது காலம் காலமாக இந்த விமர்சனங்களை வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பாராட்டுகள் எங்களுக்கு ஊக்கத்தை தருகிறது. விமர்சனங்களுக்கு செயல்பாடு மூலம் பதில் தருகிறோம் என்ற முதல்வரின் கருத்துதான் இதற்கு பதில்.
200 தொகுதிகளை இலக்காக வைத்து முதல்வர் ஸ்டாலின் களமிறங்கியுள்ளார். ஆனால், கூட்டணி ஆட்சி தான் வரும் என்கிறாரே அண்ணா ..?
எங்களைப் பொறுத்தவரை அரசின் திட்டங்களும். தோழமைக் கட்சிகளின் கூட்டணியும் பெரும் பலமாக உள்ளது. இந்த இணைப்பினால் தான் 10 தேர்தல்களில் தொடர்ந்து வென்றுள்ளோம். எங்களுக்கு எதிரில் இருப்பவர்கள் நிலை என்ன என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள். >>வீடியோ லிங்க்...