

புதுச்சேரி: புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற நடைமுறை இன்று முதல் அமலானது. ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்ததோடு, ஹெல்மெட் அணிய அறிவுறுத்தினர்.
இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை பல மாநிலங்கள் நடைமுறைப்படுத்தியுள்ள நிலையில் புதுச்சேரியில் செயல்படுத்துவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது. இதனிடையே புத்தாண்டு முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அரசு அறிவித்தது. அதன்படி போக்குவரத்து போலீஸாரும் ஹெல்மெட் அணிவது குறித்து பொதுமக்கள், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தனர். வினாடி-வினா போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு ஹெல்மெட் இலவசமாக வழங்கினர்.
இதனிடையே புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மேலும் சில நாட்கள் விழிப்புணர்வு ஏற்படுத்திவிட்டு ஜன. 12 (இன்று) முதல் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வரவேண்டும் என்று அரசு நிர்வாகம், உயர்கல்வி துறை சார்பில் உத்தரவிடப்பட்டது. போக்குவரத்து போலீஸாரும் ஹெல்மெட் அணிவது பற்றிய பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகளை தொடர்ந்து நடத்தி நடத்தினர்.
சாலை விபத்துக்களில் ''உயிர் இழப்பு இல்லாத புதுச்சேரி என்ற மையக்கருத்தோடு ஹெல்மெட் அணிவது குறித்த பிரமாண்ட விழிப்புணர்வு பேரணியும் நடத்தப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் இன்று முதல் இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிவது அமலுக்கு வந்தது. இதையொட்டி புதுச்சேரி போக்குவரத்து போலீஸார் காலை முதல் பல்வேறு இடங்களில் வாகன தண்ணிகையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை, சிவாஜி சிலை அருகே போக்குவரத்து சீனியர் எஸ்.பி. பிரவீன்குமார் திரிபாதி உத்தரவின்பேரில் கிழக்கு - வடக்கு எஸ்.பி. செல்வம் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீஸாரும், மரப்பாலம் சந்திப்பில் கிழக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் போக்குவரத்து போலீஸாரும் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை மடக்கிப் பிடித்து அபாராதம் விதித்தனர். ஹெல்மெட் அணிந்து செல்லுமாறு பொதுமக்களிடம் அறிவுறுத்தினர்.
இதே போல் பாகூர், தவளக்குப்பம், வில்லியனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்து அறிவுறுத்தி அனுப்பினர். அதே நேரத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு சீனியர் எஸ்பி பிரவீன்குமார் திரிபாதி ரோஜா பூ மற்றும் இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.