முதல்வர் ஸ்டாலின் எல்லோருக்குமான தலைவராக இல்லை: அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

முதல்வர் ஸ்டாலின் எல்லோருக்குமான தலைவராக இல்லை: அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு
Updated on
1 min read

மதுரை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எல்லாருக்குமான தலைவராக இல்லை என்றும், அவர் பெரியாரின் அடிமையாக உள்ளார் என்றும் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.

பிராமணர்கள் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும், சனாதன தர்மத்தையும், இந்து ஆலயங்களையும் பாதுகாக்க வேண்டும் என்பது உட்பட 21 கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை பழங்காநத்தத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமை வகித்தார்.

பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா, தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் திருமாறன் உட்பட பலர் பங்கேற்றனர். உண்ணாவிரதம் இருந்தவர்கள், பிராமணர்களை இழிவுபடுத்தி பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் எழுதப்பட்ட போர்டுகளை பிடித்திருந்தனர்.

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் பேசியதாவது: தமிழகத்தில் பிராமண எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு உள்ளிட்ட கொள்கைகளில் பெரியார் தீவிரமாக இருந்த காலத்தில் அவரிடம் அரசியல் பயின்ற அண்ணா, பெரியாரின் கருத்திலிருந்து மாறுபட்டு திமுகவை நடத்தினார். அண்ணாவின் வழியை கருணாநிதியும் பின்பற்றினார். கருணாநிதி ராமானுஜ காவியம் இயற்றினார். அண்ணாவும், கருணாநிதியும் திமுகவில் பிராமணர்களை சேர்த்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கு மாறாக நடந்துகொள்கிறார். அவர் பெரியாரின் அடிமையாக உள்ளார். எல்லோருக்குமான அரசு எனக்கூறும் முதல்வர் எல்லோருக்குமான தலைவராக இல்லை. பிராமணர்களின் கோரிக்கை தொடர்பாக நேரில் சந்தித்து மனு கொடுக்க நேரம் கேட்டும் முதல்வர் இதுவரை நேரம் ஒதுக்கவில்லை. பிராமணர்களின் கோரிக்கையை முதல்வர் ஏற்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். ஒரு சமூகத்தை இழிவாக பேசும் போது எப்படி வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ, அதே போல் பிராமணர்களை அவதூறாக பேசுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in